நடிகர் கமல்ஹாசன் தனது கொள்கையை விடுத்து தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடியையும், அவரது சொந்தப்பணம் 6 கோடியையும் சேர்த்து 16 கோடியை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்டிற்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது.
இந்த ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்ற கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில் இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் பேட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததின் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும்.
அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்றார்.
Tags:
Cinema
,
கமல்
,
சினிமா