நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார்.
ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ‘2.0’, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிறது. கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தன. இதற்காக ரஜினிகாந்த் அந்த நாட்டில் பல வாரங்கள் முகாமிட்டு நடித்துக்கொடுத்தார். தினமும் தன்னை காண வந்த ரசிகர்களையும் சந்தித்தார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பை சமீபத்தில் மீண்டும் மலேசியாவில் நடத்தினர். ரஜினிகாந்த் இதில் பங்கேற்று நடித்து கொடுத்துவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பினார். தொடர்ந்து ‘2.0’ படவேலைகளில் ஈடுபட்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தீவிரமாக நடித்ததாலும், இதற்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் சோர்வாக காணப்பட்டார். இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள அறை எண் 101-ல் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.
ரஜினிகாந்துக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைகள்தான் நடந்தது என்றும் அவர் உடல் நலத்தோடு இருக்கிறார் என்றும் மாலையே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதுபோலவே சிகிச்சை முடிந்து மாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
ஏற்கனவே கடந்த 2011 ஏப்ரல் மாதம் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்துக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறினர்.
இதைதொடர்ந்து சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் அந்த ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். டாக்டர் குழுவினர் அவருக்கு உயர்தர சிகிச்சை அளித்தனர்.
தீவிர சிகிச்சைக்குப்பிறகு பூரண குணம் அடைந்து சென்னை திரும்பினார். ராணா படம் கைவிடப்பட்டது. அதன்பிறகு கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். தொடர்ந்து லிங்கா படத்திலும் நடித்தார்.
Tags:
News
,
சினிமா
,
ரஜினிகாந்த்