நடிகர் சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. சென்னையில் உள்ள அவரது வீட்டு முன்பு போராட்டங்களும் நடைபெற்றன.
பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிம்பு மீதும், அவர் பாடிய பாடலுக்கு இசை அமைத்ததாக கூறப்படும் அனிருத் மீதும் புகார்கள் கூறப்பட்டது.இதையடுத்து கோவை மற்றும் சென்னை போலீசார் சிம்பு மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிம்பு மீது போடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும், அவை ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்பதால், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.
மேலும், சிம்பு ஜனவரி 11ந்தேதி அன்று விசாரணைக்காக சென்னை போலீசில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.சிம்பு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே கமிஷனர் அலுவலகத்தில் இன்று சிம்பு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந் நிலையில், போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சிம்பு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
Tags:
Beep song
,
Cinema
,
simbu
,
சிம்பு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
,
சினிமா