திருச்சி டைகர்ஸ் (சிவகார்த்திகேயன்), சென்னை சிங்கம்ஸ் (சூர்யா), ராம்நாட் ரைனோஸ் (விஜய் சேதுபதி), கோவை கிங்க்ஸ் (கார்த்தி), சேலம் சீட்டாஸ் (ஆர்யா), மதுரை காளைஸ் (விஷால்), தஞ்சை வாரியர்ஸ் (ஜீவா), நெல்லை டிராகன்ஸ் (ஜெயம் ரவி) ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. குலுக்கல் முறையில் எதிரணிகள் தேர்வு செய்யப்பட்டு லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டது.
முதல்போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணியை வென்றது. அதன்பின், விஜய் சேதுபதியின் ராம்நாட் ரைனோஸ், கார்த்தியின் கோவை கிங்ஸ் அணியை வென்றது. ஆர்யாவின் சேலம் சீட்டாஸ், விஷாலின் மதுரை காளைஸ் அணியை வென்றது. ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணி, ஜெயம் ரவி நெல்லை டிராகன்ஸ் அணியை வென்றது.
அரையிறுதிப் போட்டியில், சேலம் சீட்டாஸை, சென்னை சிங்கம் வீழ்த்தியது. ராம்நாட் ரைனோஸை, தஞ்சை வாரியர்ஸ் அணி வென்றது.
இறுதிப் போட்டியில் ஜீவாவின், தஞ்சை வாரியர்ஸ் 6 ஓவர்களில் 83/2 ஓட்டங்கள் எடுக்க, சென்னை சிங்கம்ஸ் - விக்ராந்த் (7 பந்தில் 20 ஓட்டங்கள்), உதயா (12 பந்தில் 24 ஓட்டங்கள்) ஆகியோரின் அதிரடியில் 5வது ஓவரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
எல்.பி.டபிள்யூ இல்லை, நோ பால், வைடுக்கு இரண்டு ரன்கள், ஒரு ஆட்டக்காரர் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தால் அவர் வெளியேறி அடுத்த ஆட்டக்காரர் விளையாடவேண்டும் என்பது போன்று குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்காக, விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
ஏனோதானோவென்று ஆட்டம் இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு கொஞ்சம் இன்ப அதிர்ச்சிதான். சிலரின் பேட்டிங், பவுலிங் எல்லாம் ப்ரொஃபஷனல் லெவலில் இருந்தது. ஒருமாதிரி சீரியஸான மனோபாவத்தில் ஆடினாலும், தோற்றபோதும் சிரிப்புக்கோ, கைகுலுக்கல்களுக்கோ குறைவிருக்கவில்லை. விஷால் மட்டும் கொஞ்சம் உர்ர்ரென்றிருந்தார். நிகழ்ச்சி நல்லபடியாக முடியவேண்டுமென்ற டென்ஷனாக இருக்கலாம்.
வந்திருந்த ஸ்டார்களை வரவேற்பதிலிருந்து, இளைஞர்களை உற்சாகப்படுத்துவது வரை எல்லாவற்றையும் அழகாக கையாண்டார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.
கமல் வந்த சிலநிமிடங்களில் ரஜினி வந்ததும், மகிழ்ந்து போயினர் அனைத்து நடிகர்களும். ரஜினி, கமலுக்கு அனைத்து அணியின் கேப்டன்களும் தங்கள் அணி வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.
நாட்டுப்புற கலைகளான கரகாட்டம் தப்பாட்டம் தவில் போன்றவை எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு கொதிக்கும் வெயிலில் கலைஞர்கள் இவற்றை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
ரஜினி, கமல், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, வெங்கடேஷ், அம்பரீஷ், மம்முட்டி, மோகன் பாபு, சிவராஜ்குமார், சுதீப் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய முன்னணி நடிகர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
’ஆடலும் பாடலும் போட்டே ஆகணும்’ என்ற சிவகார்த்திகேயனின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீகாந்த் தேவாவின் ஆர்கெஸ்ட்ரா சிறிது நேரம் நடைபெற்றது.
ஐபிஎல்லின் போது, சென்னை அணி சார்பாக பங்குபெற்றதைப் போலவே, டிரம்ஸ் சிவமணி போட்டிகளின்போது தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். டிரம்ஸ் சிவமணியுடன், கமலும் இணைந்து சிறிது நேரம் டிரம்ஸ் இசைத்தார்.லீக் ஆட்டங்கள் முடிந்த இடைவெளியில், மம்முட்டி, கமல், வெங்கடேஷ், விக்ரம், சுதீப் உள்ளிட்டோர் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து பறை அடித்து மகிழ்ந்தனர். அதிலும் ‘பர்த்டே பாய்’ விக்ரம் வேற வெலவில் கலக்கினார்!
பாலகிருஷ்ணா, வெயில்தாங்காமல் சட்டையைக் கழட்டி முண்டா பனியனோடு செம கேஷுவலாக இருந்தார். அவர் ஸ்டைலிலேயே, ‘சென்னை என் ஊரு’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார். சிவராஜ்குமாரும், ‘நான் பொறந்தது, படிச்சதெல்லாம் இங்கதானே. விஷால், கார்த்தி கூப்டப்ப, ‘என் ஊருக்கு நான் வராமயா?’ன்னுதான் சொன்னேன்’ என்றார்.
சிவராஜ்குமார் ஒன்றிரண்டு முறை ‘சிவகார்த்திகேயனை ரொம்ப பிடிக்கும்’ என்றார்.
சத்யராஜ், ‘பல பேருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது. எனக்கு கிரிக்கெட் பார்க்கவே தெரியாது’ எனக் கூறி சிரிப்புமூட்டினார்.
சரத்குமார், ராதாரவி, விஜய், அஜித் ஆகியோர் வரவில்லை. ஆனால் சரத்குமார் மகள் வரலட்சுமி இறுதிவரை இருந்தார். அதேபோல, நடிகர்சஙகத் தேர்தலில் சரத்குமார் அணியில் இருந்த விஜயகுமாரும் வந்திருந்தார்.
சேலம் சீட்டாஸ் சார்பில் விளையாடிய கார்த்திக் இளம் நடிகர்களுக்கும் டஃப் போட்டி கொடுத்தார். நேர்கோட்டில் ஸ்லோ பால் வீசி, மிரளவைத்தார். கடும்வெயிலிலும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். ’அவர் அப்பவே இந்த மாதிரி கிரிக்கெட்லாம் விளையாடிருக்கார்’ என்றார் நடிகர் சுரேஷ்.
விக்ரமின் பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸாக பெரிய சைஸ் கேக் வரவழைக்கப்பட்டு மைதானத்திலேயே கொண்டாடப்பட்டது.
சேலம் சீட்டாஸின் ஆர்யா, நிகழ்ச்சி முழுவதுமே செம ரகளையாகத் திரிந்தார். விஷாலை கலாய்த்துக் கொண்டே இருந்தார் ‘எப்போ கல்யாணம் ஆர்யா?’ என்று வரலட்சுமி கேட்டதற்கு ‘நடிகர் சங்கக் கட்டடத்தில மொதல்ல அண்ணன் விஷாலுக்கு கல்யாணம். அடுத்ததா நான் பண்ணிப்பேன். அப்டி அவனுக்கு பொண்ணு கெடைக்கலைன்னா, நாங்க ரெண்டு பேரும் பண்ணிப்போம்’ என்று கலாய்த்தார். லீகில், விஷால் அணியை வென்றதும், ‘புரட்சித்தளபதி விஷாலைப் போட்டுத் தள்ளீட்டோம்’ என்றார்.
நடிகர் சங்கத்துக்கும், சங்கத்தின் மூலம் வேறு சிலருக்கும் என சில நல்ல காரியங்கள் அரங்கேறின. நிகழ்ச்சியின் ஆரம்பமாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்கம் சார்பாக ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு வழங்கினர். அதே சமயம் சன் டிவி நடிகர் சங்கத்துக்கு 1.75 கோடிக்கு காசோலையும், சங்கத்தின் அறக்கட்டளைக்கு 7.25 கோடிக்கான காசோலையும் என மொத்தம் ஒன்பது கோடியை வழங்கினர்.
மேலும் ஸ்பான்சர்களின் பணங்களும் சங்கத்துக்கு வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வாங்கிய விக்ராந்த், அதற்காக தனக்கு அளிக்கப்பட்ட புது காரை நடிகர் சங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதே போல இறுதியில் விஷால் பேசுகையில், ‘நலிந்த நாடகக் கலைஞர்கள் உட்பட பலர் இதனால் பயன்பெறப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இங்கு வந்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.
முன்னதாக ரஜினி, கமலை பேட்டி கண்ட சுஹாசினி, ‘சினிமால சரிசமமா இருக்கற ரெண்டு பேர் ஒற்றுமையா இருக்கறதுக்கு நீங்க ரெண்டு பேரும் பெரிய உதாரணம்! எப்படி இப்படி?’ என்று கேட்க, ‘கமல்தான் முன்னோடி’ என்று மைக்கை கமலிடம் கொடுத்தார் ரஜினி. கமல், ‘இது நாங்க மனதார தெரிஞ்சே எடுத்த முடிவு. ரெண்டு பேரோட தொழில் போட்டி ஒருபக்கம்... யாரார் என்னென்ன சொல்லுவாங்கன்னெல்லாமே எங்களுக்கு தெரியும். இது எதுவுமே எங்க நட்பை பாதிக்க கூடாதுன்னு இருந்தோம். நல்லவேளை சின்ன வயசுலயே இந்த முடிவ எடுத்தோம். இப்ப சொல்லிக்கப் பெருமையா இருக்கு’ என்றார்.
Tags:
Cinema
,
ஆர்யா
,
கமல்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
சூர்யா
,
ரஜினி
,
விஷால்
,
ஜீவா