பாலா இயக்கிய தாரைதப்பட்டை இளையராஜாவின் ஆயிரமாவதுபடம் என்று அறிவித்தார்கள். அந்தப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவை ஆயிரம்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கான பாராட்டுவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
சென்னையை புரட்டிப்போட்ட மழைவெள்ளம் காரணமாக அது நடக்காமல் போனதாகச் சொல்லப்பட்டது. அதன்பின்னர், இளையராஜாமியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து, ஆயிரம் படங்களைக் கடந்த இளையராஜாவுக்குப் பிரமாண்ட பாராட்டுவிழாவை நடத்துவதாக அறிவித்திருக்கின்றனர். இந்தவிழா பிப்ரவரி 27 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திரையுலகம் சார்பில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இளையராஜாவைப் பாராட்டுவதற்கு திரையுலகம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்? இளையராஜாவைப் பாராட்டுவதை எதிர்க்கவில்லை, அந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்துவதைத்தான் எதிர்க்கிறார்களாம்.
விஜய்தொலைக்காட்சிக்கும் தயாரிப்பாளர்கள்சங்கத்துக்குமிடையே திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமம் வாங்குவது தொடர்பாக, ஏற்கெனவே கருத்துவேறுபாடு இருக்கிறதாம். இதனால் இந்நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை விஜய் தொலைக்காட்சிக்குக் கொடுக்கக்கூடாது என்று திரையுலகம் சார்பில் இளையராஜாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.
இந்தவிசயம் தெரியாமல் அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்தும் அனுமதியைக் கொடுத்துவிட்ட இளையராஜா இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம். ஓரிருநாளில் விழாவை விஜய் தொலைக்காட்சி நடத்துமா? நடத்தாதா? என்பது தெரிந்துவிடுமாம்.
Tags:
Cinema
,
இளையராஜா
,
சினிமா
,
தாரைதப்பட்டை
,
பாலா
,
விஜய் தொலைக்காட்சி