பல தள்ளிப்போடுதலுக்குப் பிறகு மாஸ் கிளாசாக இறங்கியுள்ளது தெறி டீஸர். விஜய்யின் கண்களும், முகமும் வருவதற்கு முன்பாகவே வந்து நிற்கிறது போலீஸ் ஜீப், பூட்ஸ் காலும், கையில் துப்பாக்கியும்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். படத்தின் கலர்ஃபுல்லாக இரண்டு நாயகிகள் இருப்பினும் டீஸரில் இடம்பெறும் பாக்கியம் என்னவோ மீனாவின் மகள் நைனிகாவிற்குதான்.
மூன்று விஜய் டீஸரில், என்ன மூன்று விஜய்யா?, நாங்கள் இரண்டு கெட்டப்பைத் தானே பார்த்தோம் என்றால் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்க்கவும் மொட்டையடித்த விஜய் மோட்டார் பைக்கில் கெத்துக் காட்டுவார். போலீஸுக்கான மிடுக்கு, சாட்டை போன்ற உடல்வாகு என்றால் கண்டிப்பாக விஜய் மாஸ் தான். அந்த வகையில் ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ என சொல்லிக்கொண்டே பிரம்பால் டேபிளில் அடிக்கும் காட்சிகள் கண்டிப்பாக நாடி நரம்பெல்லாம் விஜய்யின் பெயர் ஓடும் ரசிகனுக்கு விருந்தான காட்சிதான்.
இந்த டுவிங்கிள் டுவிங்கிள், சற்றே வேதாளம் ‘கண்ணா மூச்சி ரே ரே’ மொமெண்டை நினைவுக்குக் கொண்டு வந்தாலும் ’வேதாளம்’ வசனம் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் பழி வாங்கும் வெறியைக் காட்டும். ஆனால் தெறி வசனம், படத்தின் டீஸர் காட்சிகளிலேயே அவர் ஒரு குழந்தையுடன் அப்பாவாக தோன்றுகிறார் , வில்லன்களை சுளுக்கெடுக்கும் தருவாயில் கூட குழந்தையுடன் பழகிய பாடலுடன் இருப்பது கேரக்டரை அட்லீ கொஞ்சம் நிதானமாகவே படைத்துள்ளது தெரிகிறது. மேலும் குழந்தைகளுக்குப் பிடித்தாற் போல் வந்தால் தான் அது விஜய்.
எல்லாம் சரி இந்த புகைக்குள்ளிலிருந்து விஜய் வருவதும், அல்லது அரை இருட்டில் விஜய்யைக் காட்டுவது ஏற்கனவே பார்த்த துப்பாக்கி, கத்தி டீஸர்களின் பாதிப்பு டக்கென மண்டைக்குள் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. ப்ளீஸ் அடுத்த விஜய் டீஸரிலாவது எடிட்டர்கள் நோ ஸ்மோக்கிங்கை ஃபாலோ பண்ணுங்க,அதே போல் துப்பாக்கியின் பாதிப்பு சில இடங்களில் பளிச்சென தெரிகிறது, ராஜேந்திரனின் ஐயம் வெயிட்டிங், துப்பாக்கியுடன் விஜய் கொடுக்கும் போஸ் என கொஞ்சம் ரிபீட் ரகம். பின்னணி ஜி.வி.தெரியாமல் அனிருத் லைட்டாகத் தெரிகிறார். விடுங்க பாஸ்....ஏழு ஸ்வரங்கள் தானே இருக்கு என மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.
ஸ்கூல் வேன் கவிழ்ந்து விழும் இடத்தில் தெறி போட்ட எடிட்டர் ரூபெனுக்கும், இயக்குநர் அட்லீக்கும் சபாஷ் போடலாம். பல மாஸ் ஹீரோக்களின் டீஸர்களில் ஹீரோக்களின் டயலாக் முடிவிலோ, அல்லது பன்ச்களிலோ தான் பெயர் விழும். இங்கே ஸ்கூல் வேன் விழுவதிலேயே கதைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் தன்மை தெரிகிறது.
மேலும் செண்டிமெண்ட் காட்சிகள் தாய்க்குலங்களுக்கு பல்க்காக படத்தில் இருப்பதும் புரிகிறது. என்னப்பா ரெண்டு நாயகிகள் இருந்தும் கடுகளவு கூட காட்டவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருப்பினும், விஜய் வந்தா மட்டும் போதும் என்கிற ரசிகர்களின் மனதை அட்லீ நன்கு புரிந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் தெறி மாஸ்.
இப்படி டீஸர் குறித்து கருத்து சொல்வதற்குள், டீஸர் எங்க பாஸ் என கதற வைத்துவிட்டனர் இணைய விஷமிகள். ஆரம்பமே தெறி’க்கு சோதனை வந்தாலும், விஜய் பாணியில் ஆல் ஈஸ் வெல் சொல்லிவிட்டு அதே லின்க்கில் மீண்டும் டீஸர் தோன்றியுள்ளது.
Tags:
Cinema
,
Theri
,
theri teaser
,
Vijay
,
சினிமா
,
தெறி
,
விஜய்