“ஜாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம்” என்று நாளைய தினம் காதலர் தினத்தைக் கொண்டாட இந்த உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இளம் நெஞ்சங்களின் மனதில் காதலை உரம் போட்டு தீவிரமாக வளர்க்கக் காரணமாக இருந்த பிரபல நட்சத்திரங்களின் காதல் பற்றி இங்கே காணலாம்.
இந்த ஜோடிகளின் சிறப்பே காதலுக்குப் பின்னரான திருமண வாழ்க்கையிலும் மற்ற இளம் ஜோடிகளுக்கு உதாரணமாகத் திகழ்வதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்வண்ணன் – சரண்யா
தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான பொன்வண்ணன் “என்னோட வாழ்க்கை முழுக்க உங்களோட கால்ஷீட் வேணும்” என்று சரண்யாவிடம் இயல்பாக தனது காதலை வெளிப்படுத்தியவர். 1995 ம் ஆண்டில் சரண்யா – பொன்வண்ணன் காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது.இவர்களின் அழகான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 21 வருட திருமண வாழ்க்கையில் இன்றுவரை எந்தவித வதந்தி, வீண் சச்சரவுகளும் இவர்களைப் பற்றி வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் – ஷாலினி
அஜீத் – ஷாலினி தம்பதியைப் பற்றி எதுவும் பெரிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜீத் ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்த மத வேற்றுமைகளை பொருட்படுத்தாத இந்தக் காதல் 2௦௦௦ ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. 15 வருட வெற்றிகரமான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக அனௌஷ்கா, ஆத்விக் என்று 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
சூர்யா – ஜோதிகா
பூவெல்லாம் கேட்டுப் பார், உயிரிலே கலந்தது, மாயாவி, காக்க காக்க, பேரழகன், ஜூன் ஆர் மற்றும் சில்லுன்னு ஒரு காதல் என்று 7 படங்களில் சேர்ந்து நடித்து இந்த ஜோடியின் காதலைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகளே இல்லை. அந்த அளவிற்கு உருகி, உருகிக் காதலித்த இருவரும் 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 9 வருட திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக தியா, தேவ் என்று 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜோதிகா மீண்டும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரசன்னா – சினேகா
புன்னகை இளவரசி என்று புகழப்படும் சினேகாவை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சினேகாவிடம் எத்தனையோ பேர் காதலை சொன்னாலும் அவர் தேர்ந்தெடுத்தது என்னவோ பிரசன்னாவைத் தான்.அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது மலர்ந்த பிரசன்னா- சினேகா காதல் 2012 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. மகிழ்ச்சியான இவர்கள் திருமண வாழ்வுக்கு அடையாளமாக ஒரு ஆண் குழந்தை இவர்களுக்கு உள்ளது.
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி
பள்ளிப்பருவத்திலேயே மலர்ந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி காதல் 9 ஆண்டுகள் நீடித்து 2013 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்த ஜி.வி திருமணத்திற்குப் பின் வெற்றிகரமான நடிகராகவும் மாறியிருக்கிறார்.
மேலே சொன்ன ஜோடிகளைப் போல காதலர்களும் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக வலம்வர வாழ்த்துக்கள்!
Tags:
Cinema
,
அஜீத்
,
சினிமா
,
சூர்யா
,
ஜோதிகா
,
ஷாலினி