பிரதமர் நரேந்திர மோடியின் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை திரையுலகை ஆட்டம் காண வைத்துள்ளது. இங்கு அனைத்து பணிகளும் பண பரிவர்த்தனைகள் மூலமே நடக்கின்றன. இதற்காக பல கோடிகளை கடனாக கொடுத்து படங்கள் திரைக்கு வரும்போது வட்டியுடன் சேர்த்து வாங்கும் பைனான்சியர்கள் நிறைய பேர் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறார்கள். ஒருநாள் படப்பிடிப்புக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது.
நடிகர்-நடிகைகளுக்கான சம்பளம் காசோலையாகவும் ரொக்கமாகவும் கொடுக்கப்படுகிறது. தற்போது 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றதால் சினிமா பணிகள் பாதித்து உள்ளன. 20-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் தடுமாற்றத்தில் உள்ளன.
பழைய நோட்டுகளை மாற்றி புதிய பணத்துடன் படப்பிடிப்பை உடனடியாக தொய்வின்றி தொடர்ந்து நடத்துவது முடியாத காரியமாக ஆனதால் தவிக்கிறார்கள்.
திரையங்குகளில் கூட்டம் குறைந்து வசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் சம்பளமும் குறையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, “பிரதமரின் புதிய திட்டத்தால் சினிமாவில் பண புழக்கம் குறையும். அனைவரும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அனைத்து வரவு செலவுகளுக்கும் கணக்கு வைக்க வேண்டும். இதனால் தயாரிப்பு செலவுகளும் நடிகர்-நடிகைகள் சம்பளமும் குறையும்” என்றார்.
நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஓடுகிற குதிரையில்தான் பணம் கட்டுகிறார்கள் என்று நடிகர்கள் தரப்பில் அவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது பிரதமரின் அதிரடி அறிவிப்பால் நடிகர்-நடிகைகள் சம்பளம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து வரவு செலவும் கணக்கிற்குள் வருகிறது. வரியும் கணிசமாக கட்ட வேண்டி இருக்கிறது. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்-நடிகைகள் சம்பளம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவர் தனது சம்பள தொகை ரூ.25 கோடியை வீட்டில் வைத்து இருந்ததாகவும் தற்போது அந்த பணம் மாற்ற முடியாத நிலையில் செல்லாக்காசு ஆகி அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி இருக்கிறது.
Tags:
Cinema
,
சம்பளம்
,
சினிமா
,
நடிகர்
,
நடிகைகள்
,
பிரதமர்
,
மோடி