“காஷ்மோரா படத்தில் நடித்தபோது நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை” என்று நடிகை ஸ்ரீதிவ்யா கூறினார்.
படவிழா
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கிறார்கள். கோகுல் டைரக்டு செய்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசும்போது, “மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான ‘பாகுபலி’ படம் திரைக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரமாண்ட படமாக காஷ்மோரா தயாராகி உள்ளது. நயன்தாரா மிக சிறந்த நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபிப்பார். இதற்கு முன்பு எல்லா படங்களிலும் ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நகரத்து பெண்ணாக வருகிறார்” என்றார்.
ஸ்ரீதிவ்யா பேட்டி
பாடல் வெளியீட்டு விழா முடிந்ததும் விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
“காஷ்மோரா படத்தின் கதையை டைரக்டர் கோகுல் என்னிடம் சொன்னபோது நயன்தாரா கவுரவ வேடத்தில்தான் வருகிறார் என்றார். அதனால் எனக்கு அவரைப்பார்த்து பயம் ஏற்படவில்லை. அவருக்கு அதிக காட்சிகள் இருக்குமோ என்று மிரளவும் இல்லை. எனது கதாபாத்திரம் எனக்கு திருப்தியாக தோன்றியது. வித்தியாசமாகவும் இருந்தது. இந்த படத்தில் காதல் இல்லை. நானும் நயன்தாராவும் ஒரே நாள்தான் இணைந்து நடித்தோம்.
நயன்தாரா
முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது என்னிடம் நன்றாகவே பேசினார். அவர் அழகாக இருந்தார். இதுவரை பல படங்களில் பாவாடை தாவணியில் நடித்து விட்டேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது என்று சொன்னார்கள். இந்த படத்தில் ‘மாடர்ன் கேர்ள்’ ஆக வருகிறேன். நான் அதிக சம்பளம் கேட்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறு. அப்படி யாரிடமும் கேட்கவில்லை. நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் தோன்ற விரும்புகிறேன்.”
இவ்வாறு ஸ்ரீதிவ்யா கூறினார். பட விழா நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கினார். டைரக்டர் கோகுல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
Tags:
Cinema
,
அதிரடி
,
கார்த்தி
,
காஷ்மோரா
,
சினிமா
,
நயன்தாரா
,
பயப்படவில்லை
,
ஸ்ரீதிவ்யா