அஜித்துக்கும் தனக்கும் எவ்வித பிரச்னையுமில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்கள். அப்போது நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால் கூறியதாவது:
விமர்சனங்களை மீறி நட்சத்திர கிரிக்கெட் வெற்றி பெற்றது.
நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்துகொள்ளாததால் அவர் மீது கோபம் இல்லை. கலந்துகொள்ளாத யார் மீதும் கோபம் இல்லை. நடிகர் சங்கத்தில் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். அஜித்தின் கருத்தை மதிக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட உரிமை. எனக்கும் அஜித்துக்கும் எவ்விதப் பிரச்னையும் கிடையாது. சக நடிகர்களிடம் பிரச்னை செய்வதற்காக நடிகர் சங்கத்துக்கு வரவில்லை" என்றார்.
ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் பக்கத்தில், நடிகர் சங்க நிகழ்ச்சியில் அஜித்தின் பாடலை விஷால் நிறுத்தினார் என்று செய்தி வெளியானது. செய்தியே முதலில் தவறு. மேலும் அஜித்தின் பாடலை விஷால் நிறுத்தியது என்பது ஒரு செய்தியா? அந்தச் சம்பவம் உண்மையா என்று என்னிடம் கேட்டு செய்தி வெளியிட்டிருக்கலாம்.
நடிகர் சங்கத்திலிருந்து விலகுவது குறித்து சிம்பு அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப்போ, லீ கிளப்போ கிடையாது. சேவை பிடிக்கவில்லை என்று விலக முடியாது. சிம்புவின் கருத்தை மதிக்கிறேன். ஒரு நடிகராக சிம்புவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.