கண்ணே கலைமானே, ஆடைகட்டி வந்த நிலவோ என்று கண்ணியமாக காதலையும் பெண்ணையும் சித்தரித்த சினிமாவில், லூசுப்பெண்ணே, எவன்டி உன்னை பெத்தான், கைல கெடச்சா செத்தான் என்று கண்ணியத்தை காலில் போட்டு மிதித்தவர் சிம்பு.
அவரே இயற்றி பாடிய பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையை சட்டையாக அணிந்தவை. அனைத்தின் உச்சமாக அவரது பீப் பாடல் அமைந்தது. அவர் பாடாமல் விட்ட இடங்கள் ஆபாசமான அர்த்தத்தை தந்து இளசுகளையும் முகம் சுழிக்க வைத்தது. போலீஸ், கேஸ், கோர்ட் என்று சிம்பு இழுத்தடிக்கப்பட்டார்.
ஆனாலும், அவர் திருந்துவதாக இல்லை. தற்போது நடித்துவரும் அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் சிம்பு. அதன் சில வரிகள் வெளியாகியுள்ளன.
என்னைவிட்டு யாரையாச்சும் நீ கல்யாணம்தான் பண்ணிகிட்டா கொன்னேபுடுவேன்.. - என்று தொடங்கும் அந்தப் பாடல் கடும் வெறுப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஒருதலை காதல் காரணமாக தமிழகத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்.
அவர்களின் மீது ஆசிட் வீசப்படுகிறது. ஒருதலை காதலர்களின் தொல்லை அதிகரித்துவரும் இந்த சூழலில், என்னை கல்யாணம் பண்ணாவிட்டால் கொன்றுவிடுவேன் என்ற சிம்புவின் பாடல் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றும் செயல்.
சினிமாவில் நாயகன் எவ்வளவு தறுதலையாக இருந்தாலும் நாயகி அவனை காதலித்தாக வேண்டும். அந்த தாக்கத்தில்தான் தெருவோடு போகிற பொறுக்கிகள், என்னை காதலி என்று பெண்களை வற்புறுத்துகிறார்கள். மறுத்தால் கொலை செய்கிறார்கள்.
அந்த மனோபாவத்தை இந்த பாடல் அங்கீகரிப்பது போலுள்ளது. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற விடலை படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒரு சிம்புவையே தாங்க முடியவில்லை. இதில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் காம்பினேஷன் வேறு. என்னென்ன அநாகரிகங்கள் வரப்போகிறதோ.
Tags:
Cinema
,
ஆதிக் ரவிச்சந்திரன்
,
சர்ச்சை
,
சிம்பு
,
சினிமா
,
நாயகி
,
பீப் பாடல்