கதகளி படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது போல் காட்சி அமைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, அப்பட இயக்குநர் பாண்டிராஜ் வீடு முன்பு போராட்டம் நடத்தப்போவதாக முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் வியாழனன்று பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசானது கதகளி படம்.
இப்படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்திருந்தார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு தற்போது புதிய வடிவில் பிரச்சினை முளைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் வில்லன் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவாக பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும், இல்லையென்றால் பாண்டிராஜ் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படும் என முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் எம்.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்ச்சை வசனம்...
நடிகர் விஷால் நடித்து பொங்கல் பண்டிகைக்கு வெளி வந்துள்ள கதகளி திரைப்படத்தில் முடி திருத்தும் தொழில் புரிபவர்கள் அதே தொழில் தான் புரிய வேண்டும் என வில்லன் நடிகர் வசனத்தில் உள்ளதால் எங்கள் தொழில் புரிபவர்கள் மனதில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காட்சிகளை நீக்க வேண்டும்...
எனவே, உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இழிவான காட்சி...
மேலும், இப்பிரச்சினை தொடர்பாக தஞ்சை மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் டீலக்ஸ் ஜெயபால் நீடாமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘பொங்கல் பண்டிகைக்கு வெளி வந்துள்ள கதகளி திரைப்படத்தில் சேவை சமூகங்களான மருத்துவர், சலவை தொழிலாளர், அருந்ததியர் ஆகிய சாதிகளை வில்லன் இழிவாக பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.
போராட்டம்...
இந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் இயக்குனர் பாண்டிராஜ் வீடு முன்பு அவரை கண்டித்தும், தணிக்கை குழுவை கண்டித்தும் போராட்டம் நடத்துவோம்.
சாதிப்பிரச்சினை...
தமிழக சினிமா சென்சார் போர்டு சாதி பிரச்னையை தூண்டி விடுகிறது. இனிமேலும் சமுதாயங்களை இழிவு படுத்தும் காட்சிகள் சினிமாவில் இடம் பெற்றால் சம்மந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தணிக்கை குழுவின் மீது எங்கள் தொழிற்சங்க வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடருவோம்' எனத் தெரிவித்தார்.
Tags:
Cinema
,
Kathakali
,
Vishal
,
கதகளி
,
சினிமா
,
பாண்டிராஜ்
,
விஷால்