நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், சிபுதமீன்ஸ், இயக்குனர் சிம்புதேவன், அன்பு செழியன், விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், கலைப்புலி தாணு மற்றும் புலி படத்துடன் நேரடி தொடர்புடையவர்கள் வீடுகள் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேந்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள்.
நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. நேற்றும் 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ஆகிய ஊர்களில் 10 பேருக்கு சொந்தமான 35 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
400 அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்க பணம், நகைகள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையின் போது ஒருவரின் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடி ரொக்க பணம் சிக்கியது. ரூ. 2 கோடி தங்கம், வைர நகைகளும் கிடைத்தன. இவை கணக்கில் காட்டப்படாதவை என்பது கண்டறியப்பட்டது. இவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவை தவிர 10 பேருடைய வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பத்திரங்கள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போது கணக்கில் காட்டாமல் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பான பண பரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர். இதற்கு ரூ.30 கோடி வருமான வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது ஒவ்வொருவர் வீட்டிலும், அலுவலகத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் என்ன? தனித்தனியாக கைப்பற்றப்பட்ட ரொக்க பணம் எவ்வளவு? நகை எங்கே கிடைத்தது? கணக்கில் காட்டாத சொத்துக்கள் எவை? என்பது பற்றிய முழு விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
Tags:
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
நயன்தாரா
,
விஜய்