3டி படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன? : இயக்குனர் ஜோசப் செல்வராஜ்.!!
எந்திரன் இரண்டாம் பாகத்தை 3டி தொழில்நுட்பத்தில் ஷங்கர் எடுக்கவிருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. சாதாரணப் படங்களுக்கும், 3டி படங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் 3டி படங்கள் தமிழில் அதிகம் எடுக்கப்படுவதில்லை? அதன் தொழில்நுட்பம் என்ன மாதிரியானது?
இந்த கேள்விகளுடன் இயக்குனர் ஜோசப் செல்வராஜை சந்தித்தோம். தமிழகத்தில் மோஷன் கேப்சர் 3டி அனிமேஷன் தொழில்நுட்பம் தெரிந்த அரிதான ஒருசிலரில் ஜோசப் செல்வராஜும் ஒருவர். இந்த தொழில்நுட்பத்தில் இரண்டு முக்கியமான ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். பல விளம்பரப் படங்களையும் எடுத்திருக்கிறார்.
நமது சந்தேகங்களை கேள்விகளாக முன்வைத்தோம்.
* 2டி படங்களுக்கும், 3டி படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
3டி -ங்கிறது பொதுவாக அனிமேஷனை குறிக்கிற வார்த்தை. 2டி அனிமேஷன், 3டி அனிமேஷன்னு சொல்வோம். ‘மை டியர் குட்டிச் சாத்தான்’, ‘அவதார்’ போன்ற படங்களை ஸ்டீரியோஸ்கோபிக் 3டி-ன்னு சொல்லணும். அதுதான் சரியான வார்த்தை. 2டி படம்ங்கிறது நாம சாதாரணமாக பார்க்கிற படங்கள். 3டி-ல் முப்பரிமாணமும் தெரியும். 2டி-ல் ஒரு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்க்கிறோம். 3டி-ல் இரண்டு கேமராவில் பதிவான பிம்பங்களை பார்க்கிறோம்.
* அதை கொஞ்சம் விளக்க முடியுமா?
நம்ம இரண்டு கண்களால் ஒரே காட்சியைத்தான் பார்க்கிறோம். ஆனால், இரண்டு கண்களுக்குமிடையில் அதிகபட்சம் 10 எம்எம்வரை ஃபோகஸ் வித்தியாசம் (டெப்த் டிபரன்ஸ்) இருக்கு. அதனாலதான் கண்ணுக்குப் பக்கத்தில் வைத்து எந்தப் பொருளைப் பார்த்தாலும் இரண்டாக தெரியும். இதே மெக்கானிசத்தில் செயல்படுறதுதான் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி.
...
* அப்படியென்றால் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி யில் இரண்டு கேமராக்களை பயன்படுத்துகிறீர்களா?
ஆமா. ஒரு கேமரா வழக்கமான பொசிஷனில் இருக்கும். அதை பிரைமரி கேமரா, லெஃப்ட் ஐ அப்படீன்னு சொல்வோம். இன்னொரு கேமரா அதற்கு எதிரே கொஞ்சம் கீழே, கீழிருந்து மேலே (அல்லது மேலே, மேலிருந்து கீழே) பார்க்கிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். அது செகண்டரி கேமரா, ரைட் ஐ. இந்த இரண்டுக்கும் நடுவில் 45 டிகிரி கோணத்தில் பிரத்யேகமாக செய்யப்பட்ட கண்ணாடி வைக்கப்படும். இந்த கண்ணாடி வழியாக பிம்பங்கள் ஊடுருவவும் செய்யும், அதேநேரம் பிரதிபலிக்கவும் செய்யும். கண்ணாடி வழியாக நாம் ஷுட் பண்ற காட்சிகள் லெப்ட் ஐ கேமராவில் ஊடுருவி பதியும். அதே நேரத்தில், கண்ணாடி பிரதிபலிக்கும் அதே காட்சிகள் கீழே இருக்கும் (அல்லது மேலேயிருக்கும்) ரைட் ஐ கேமராவில் பதிவாகும். இந்த இரண்டு ஃபுட்டேஜ்களையும் எடிட் செய்வோம். அப்புறம் இரண்டையும் ஒரே நேரத்தில் திரையில் ஓடவிட்டு, தேவையான டெப்த் டிபரன்ஸை செய்வோம். கலர் கிரேடிங் மாதிரி இதனை ஸ்டீரியோ கிரேடிங்னு சொல்வோம். இந்த இரண்டு கேமராக்களும், லென்சும் பிரத்யேகமான ரிக்கில் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஏற்றப்படி கேமராக்கள் முன்னேயும் பின்னேயும் அட்ஜஸ்ட் செய்து வைக்கப்படும்.
* கண்ணாடிப்போட்டு நாம் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படங்களை பார்க்கும் போது பொருள்கள் நம் அருகில் தெரிவது எப்படி…?
படம் தெரியும் ஸ்கிரீனை நாங்க ஸீரோன்னு சொல்வோம். அதற்கு உள்ளே வருகிற டெப்த், அதாவது ஒரு மரத்தை திரையில் பார்க்கிறீங்க. அது ஸீரோ. மரத்துக்குப் பின்னால் ஒரு பாலைவனம் நீண்டு கிடக்கு. அது பாஸிடிவ் டிஸ்டன்ஸ். இந்த பாஸிடிவ் டிஸ்டன்ஸ் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இருக்கலாம். திரையிலிருந்து முன்னால் ஒரு இமேஜ் வருவதை, அதுதான் நீங்க சொல்கிற, பொருள்கள் நம் கண்ணருகில் தெரிவது – நெகடிவ் டிஸ்டன்ஸ். இந்த நெகடிவ் டிஸ்டன்ஸ் எவ்வளவு தொலைவு வெளியே வர வேண்டும், எது வெளியே வரலாம் என்பதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கு.
* அதை கொஞ்சம் விளக்க முடியுமா?
முதல் விதி, நீங்க வெளியே கொண்டு வருகிற பொருள் திரையைவிட பெரியதாக இருக்கக் கூடாது. திரையில் ஒரு மரத்தைப் பார்க்கிறீங்க. அந்த மரத்தை உங்க கண்ணுக்குப் பக்கத்தில் கொண்டு வரும் போது, அது திரையைவிட பெரிசாயிடும். அது தப்பாத் தெரியும். அதே நேரம் அந்த மரத்திலிருந்து ஒரு பறவை பறந்து உங்களை நோக்கி வர்ற மாதிரி காட்டலாம்.
ஒரு மேஜையில் ஒரு சின்ன தட்டு இருக்கிறது. அது சின்ன பொருள் என்பதற்காக அதை நீங்க வெளியே கொண்டுவர முடியாது. ஏன்னா, தட்டு மேஜையில் இருக்கு. மேஜை தரையில் இருக்கு. நீங்க தட்டை மட்டும் தனியே வெளியே எடுத்தால், அது மேஜையில் இல்லாமல் அந்தரத்தில் இருக்கிற மாதிரி தெரியும். அதே மாதிரி தரையில் நிற்கிற ஒரு மனிதனை நீங்க வெளியே கொண்டு வர முடியாது. ஆனால், அவன் கையில் இருக்கிற ஒரு குச்சி உங்க கண்ணை நோக்கி வர்றதாக காட்டலாம்.
ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படத்தை எந்த ஸ்கிரீனுக்காக எடுக்கப் போகிறோம் என்பது முக்கியம். அதை வெளியிடப் போவது பெரிய திரையரங்கு திரையிலா இல்லை டிவி ஸ்கிரீனா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். அதைப் பொறுத்தே, நெகடிவ் டிஸ்டன்ஸையும், எந்ததெந்த பொருள்களை நெகடிவ் டிஸ்டன்ஸில் காட்டலாம் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். பெரிய திரையில், ஒரு டைனோசரின் தலை பார்வையாளர்களை நோக்கி வருவதாக வைத்தால், பெரிய திரைக்கு அது பார்க்க பிரமாதமாக இருக்கும். அதை டிவி ஸ்கிரீனில் பார்க்கும் போது ஏதோ பொம்மை மாதிரி தெரியும். தவிர, நம்ம மூளை இந்த அளவுகளால் ஏமாற்றப்படும், தலைவலி உண்டாகும்.
* அவதாரை நாம் பெரிய திரையில் பார்ப்பது போலத்தானே சின்னத் திரையிலும் பார்க்கிறோம்?
சின்னத்திரையில் நீங்க 2டி-ல் தான் பார்க்கிறீங்க. 3டி-ல் பார்ப்பதில்லையே.
* இந்த விஷயங்களை தீர்மானிப்பது யார், இயக்குனரா?
இல்லை. அதற்கென்றே பயிற்சி பெற்ற ஸ்டீரியோகிராஃபர்கள் இருக்கிறார்கள். அவங்கதான் இந்த ஸீரோ, பாஸிடிவ், நெகடிவ் விஷயங்களை தீர்மானிப்பாங்க.
* ‘மை டியர் குட்டிச் சாத்தான்’, ‘இது எங்க பூமி’ என்று சில படங்கள்தான் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி-ல் எடுக்கப்பட்டன. இப்போது சமீபத்தில்தான் மீண்டும் 3டி-ல் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கு என்ன காரணம்?
‘மை டியர் குட்டிச் சாத்தான்’ வந்த நேரத்தில் இப்போதுள்ள தொழில்நுட்பம் கிடையாது. இரண்டு கேமராக்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து எடுத்தார்கள். நம் கண்களோட டெப்த் டிபரன்ஸ் அதிகபட்சம் 10 எம்எம்தான். இரண்டு கேமராக்களை அருகருகே வைத்து எடுக்கும் போது, இரண்டுக்கும் நடுவே டெப்த் டிபரன்ஸ் ஒரு அடிவரை இருக்கும். அதனால்தான், இந்தப் படங்களில் ஐஸ்கிரீம் எல்லாம் ரொம்ப பக்கத்தில் வர்ற மாதிரி இருக்கும். ரொம்ப பக்கத்தில் ஒரு இமேஜை பார்த்த உடனே உங்க கண் ரொம்ப தொலைவில் இருக்கிற ஒண்ணை பார்க்கிற மாதிரி இருக்கும். அதாவது திரைங்கிற ஸீரோ டிஸ்டன்சுக்கும், உங்க கண்ணு பக்கத்தில் வர்ற ஐஸ்கிரீம் என்கிற நெகடிவ் டிஸ்டன்சுக்கும் உள்ள தூரம் ரொம்ப அதிகம். அதனால் கண் ரொம்பவே ஸ்ட்ரெயின் ஆயிடும். தலைவலி வரும்.
புதிய டெக்னாலஜியில் ஒரு கேமராவை நேராகவும், இன்னொன்றை கீழிருந்து மேலாகவும் (அல்லது மேலிருந்து கீழாகவும்) வைத்து, நடுவில் ஒரு கண்ணாடியை வைக்கும் போது, கண்ணாடியின் வழியாக ஊடுருவும் காட்சி ஒரு கேமராவிலும், அதே காட்சியின் பிரதிபலிப்பு இன்னொரு கேமராவிலும் பதிவாகிறது. அதனால் டெப்த் டிஃபரன்ஸ் மிகவும் குறைவாகவே இருக்கும், கிட்டத்தட்ட ஸீரோ அளவுக்கு.
* இந்த புதிய தொழில்நுட்பம் எப்போது நடைமுறைக்கு வந்தது?
2008 -இல் என்று நினைக்கிறேன். ‘ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்’ ஹாலிவுட் படத்துக்குப் பிறகுதான் இந்த தொழில்நுட்பம் பரவலானது.
* நீங்க இதுவரை இந்த தொழில்நுட்பத்தில் எடுத்த படங்கள் எத்தனை?
விவேகானந்தர் அமெரிக்கா போன நிகழ்வை விவேகானந்தர் இல்லத்துக்காக 15 நிமிட டாக்குமெண்ட்ரியாக ஸ்டீரியோஸ்கோபிக் 3டி-ல் எடுத்தோம். இது மோஷன் கேப்சர் அனிமேஷன் படம்.
* சாதாரண 3டி அனிமேஷன் படத்துக்கும், மோஷன் கேப்சர் 3டி அனிமேஷன் படத்துக்கும் என்ன வித்தியாசம்?
சமீபத்தில் வெளிவந்த, ‘மினியன்ஸ்’ 3டி அனிமேஷன் படம். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘டின்டின்’ மோஷன் கேப்சர் 3டி அனிமேஷன். சாதாரண 3டி அனிமேஷனில் எல்லா பொருள்களும், நபர்களும் சிஜியில் உருவாக்கப்பட்டு, அதற்கு உடலசைவுகள் தரப்படும். மோஷன் கேப்சரில், உடலசைவுகள் மட்டும், நடிகர்களை நடிக்க வைத்து, அவர்களின் அசைவுகள் பதிவு செய்யப்பட்டு, சிஜியில் உருவாக்கப்பட்ட உருவங்களுக்கு தரப்படும். அதனால் ஸ்கின் டோன் முதல் உதட்டசைவுகள் வரை நிஜ மனிதர்களைப் போலவே இருக்கும். இந்த தொழில்நுட்பத்தில்தான் விவேகானந்தர் குறித்த டாக்குமெண்ட்ரியை உருவாக்கினோம். அதேபோல் மகாபலிபுரத்தின் வரலாறையும் 20 நிமிட டாக்குமெண்ட்ரியாக உருவாக்கினோம். அது இப்போது மகாபலிபுரத்திலுள்ள, ‘க்ரோனிக்கல் இண்டியா 70 எக்ஸ்’ திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. விவேகானந்தர் குறித்த டாக்குமெண்ட்ரியை நீங்கள் சென்னை விவேகானந்தர் இல்லத்தில் பார்க்கலாம்.
* இதுபோன்ற மோஷன் கேப்சர் 3டி அனிமேஷன் படங்களை இயக்குவதற்கும், சாதாரண படங்கள் எடுப்பதற்கும் உள்ள பிரதான வித்தியாசம் என்ன?
சாதாரண படங்களில் ஸ்கிரிப்டை தயார் செய்து, நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து, எடுத்த காட்சிகளை எடிட் செய்து, அதற்குப் பிறகு டப்பிங் பின்னணி இசை என்று போவோம். இதில் முதலில் எடிட்டிங்கிலிருந்து யோசிக்க வேண்டும். ஒரு நிமிட அனிமேஷன் படத்துக்கே பல லட்சங்கள் செலவளிக்க வேண்டியிருக்கும். அதனால் நமக்கு தோன்றியபடி எடுத்து பிறகு எடிட் செய்ய முடியாது. பண விரயம், கால விரயம் அதிகம். அதனால், எடிட்டிங்கிலிருந்து, பின்னணியிசையிலிருந்து, வசனத்திலிருந்து யோசித்துதான் ஸ்கிரிப்டையே எழுத வேண்டும். அப்படியே உல்டா பிராசஸ்.
* தமிழில் ‘அம்புலி’, ‘நான்காம் பௌர்ணமி’ என்று இரண்டு ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படங்கள் புதிய தொழில்நுட்பத்தில் வெளிவந்தும், தொடர்ச்சியாக 3டி படங்கள் வெளியாகாதது ஏன்?
நீங்க சொல்லும் இரண்டு படங்களும் சரியான ஸ்டீரியோஸ்கோபிக் 3டி கேமராவில் எடுக்கப்படவில்லை. வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர்களால் கேமராவையும், கண்ணாடியையும் அட்ஜெஸ்ட் செய்து 3டி-ல் படங்கள் எடுப்பது சாத்தியமில்லை. அதனால், அவர்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு கேமராவை உருவாக்கினார்கள். அதில் உள்ள செட்டிங்கை மாற்ற முடியாது. குறிப்பிட்ட தொலைவில் உள்ள காட்சிகளை அவை படம் பிடிக்கும். அந்த கேமராவில்தான் மேலே சொன்ன படங்களை எடுத்தார்கள். அதனால், படம் பார்த்தவர்களுக்கு ஸ்ட்ரெயின் ஏற்பட்டு தலைவலி உண்டானது. அதனால், ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படம் என்றாலே ஒரு எதிர்மறை கருத்து ஏற்பட்டுவிட்டது.
ஸ்டீரியோஸ்கோபிக் 3டி யில் ஒரு படத்தை எடுப்பது என்றால் சாதாரணமாக எடுப்பதைவிட முப்பது முதல் நாற்பது சதவீதம் அதிக நாள்கள் தேவைப்படும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேமராவையும் கண்ணாடியையும் அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும். அதனால் பட்ஜெட்டும் முப்பது சதவீதத்துக்கு மேல் உயர வாய்ப்புள்ளது. சாதாரணமாக ஐம்பது கோடியில் தயாரிக்கப்படுகிற படத்துக்கு 75 கோடிகள்வரை செலவாகும்.
இவ்வளவு செலவு செய்து எடுக்கும் படத்தை திரையிட முடியுமா என்றால் அதுவும் சாத்தியமில்லை. ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படத்தை திரையிட பிரத்யேக திரை வேண்டும், இரண்டு புரொஜெக்டர், ஸ்பெஷல் கிளாசஸ் என்று நிறைய தேவைப்படும். தமிழகத்தில் 100 -க்கும் குறைவான திரையரங்குகளிலேயே இவ்வசதிகள் உள்ளன. அவதார் தயாரான போது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் 3டி திரையிடும் வசதிக்கு மாற்றப்பட்டன. அப்படியொரு மாற்றம் தமிழகத்தில் சாத்தியமானால், தமிழிலும் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படங்கள் அதிகம் எடுக்கப்படலாம்.