அமெரிக்காவில் தனிமையில் வாக்கிங் செல்லும் ரஜினி : வைரல் வீடியோ
அமெரிக்காவுக்கு ஓய்வுக்காக சென்றுள்ள நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினா நகரில் உள்ள சச்சிதானந்தா சுவாமிகளின் ஆசிரமத்தில் சாமி கும்பிடுவது போன்ற படங்களும், கோயில் வளாகத்தில் ரஜினி, தனது இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி அங்கிருப்பவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
அதன்பின், அமெரிக்காவில் ரஜினி திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் கபாலி படத்தை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் ரஜினி வாக்கிங் செல்லும் காட்சிகள் தற்போது வீடியோவாக வெளிவந்துள்ளது.காரில் சென்ற ஒருவர் சாலையின் ஓரத்தில் தனி ஒரு ஆளாக வாக்கிங் செல்லும் ரஜினியை கண்டதும், அதை தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார்.
காரில் இருந்தபடியே ரஜினிக்கு டாட்டா காட்டும் அந்த ரசிகரை நோக்கி ரஜினியும் டாட்டா காட்டிவிட்டு நடந்து செல்கிறார். இந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கெனவே, கபாலி படம் உலகம் முழுவதும் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் காட்சிகள் இணையதளங்களில் வெளியானது அவரது ரசிகர்களிடையே மேலும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.