விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தெறி' அமெரிக்கா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என அனைத்து இடங்களிலும் கோடிகளில் வசூலித்து வருவதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்திருக்கிறார்.
ஏப்ரல் 14ம் தேதி வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. செங்கல்பட்டு ஏரியா விநியோக பிரச்சினையால் பல திரையரங்குகளில் இப்படம் வெளியாகவில்லை. முதல் நாள் மட்டும் தமிழகத்தில் 13 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. செங்கல்பட்டு ஏரியாவில் பல திரையரங்குகளில் படம் வெளியாகாவிட்டாலும் இவ்வளவு வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ரஜினி, கமல் படங்களுக்கு நிகராக சுமார் 1 மில்லியன் டாலர் (சுமார் 6.5 கோடி) வசூல் செய்யும் என்று கணித்திருக்கிறார்கள். 'கத்தி' வசூலை கண்டிப்பாக 'தெறி' முறியடிப்பது உறுதி என்கிறார்கள். 2 நாட்களில 3.30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இது பெரிய வசூலாகும்.
கேரளாவில் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படத்தை விட 'தெறி' அதிக வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் 3 கோடியைத் தாண்டியிருக்கிறது. கர்நாடகாவில் 'லிங்கா', 'கத்தி', 'ஐ' படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து சுமார் 2.25 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தெறி' வெளியான அனைத்து ஊர்களிலும் நல்ல வசூல் செய்து வருவதால் தயாரிப்பாளர் தாணு அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார். அனைத்து விநியோகஸ்தர்களும் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் படத்தின் அமோக வசூலால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Tags:
Cinema
,
Converge Theri Collection
,
Theri Collections
,
சினிமா
,
தெறி வசூல்