இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின்போது நடிகை தேவயானியுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், இவர் இயக்கிய காதலுடன் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, திருமதி தமிழ் படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், நீண்டகாலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராஜகுமாரன், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடி வேடத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக பரத் நடிக்கவிருக்கிறார்.
வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகவுள்ள இப்படத்தில் ராஜகுமாரனுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் வரிசையில் உள்ள சமந்தா, ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, படக்குழு வட்டாரங்களில் விசாரிக்கும்போது, இந்த படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகவில்லை என்றும், அவ்வாறு வெளியான செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என்றும் கூறப்பட்டது.
ஏற்கெனவே, டி.ராஜேந்தர்தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது, அவரை நீக்கிவிட்டு, ராஜகுமாரனை விஜய்மில்டன் ஹீரோவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சந்தானம்
,
சமந்தா
,
சினிமா
,
தேவயானி
,
ராஜகுமாரன்