நடிகர் சித்தார்த் ‘ஏடாகி எண்டர்டைன்மெண்ட்’ எனும் பட நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து நாயகராக நடித்தும் வெளிவந்திருக்கும் படம் தான் “ஜில்.ஜங். ஜக்.”
ஒரு பெரும் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் தெய்வா எனும் தெய்வநாயகம். பெட்ரோல் தட்டுப்பாடு, இன்னும் சில அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகளால் 2020-ம் ஆண்டில் தொழில் முடங்கிப் போன அந்த தாதா, தன்னிடம் கடைசி, கடைசியாக இருக்கும் நான்கு கோடி மதிப்புள்ள சரக்கை ஹைதராபாத்துக்கு வரும் சைனிஸ் பார்ட்டியிடம் கைமாற்றி விட்டு காசு பார்க்க நினைக்கிறார்.
ஆனால், போட்டியாளர்கள் கண்களிலும், போலீஸீன் கண்களிலும் மண்ணைத்துவி விட்டு சரக்கை ஹைதராபாத்துக்கு கொண்டு செல்ல தன் பழைய ஆட்களையும், பழைய பார்முலாவையும் நம்பாத தெய்வநாயகம், தேர்ந்தெடுக்கும் மூன்று பேரும், ஒரு காரும், அது சார்ந்த காமெடி கதையும்தான் ஜில் ஐங் ஜக் மொத்தப் படமும்!
நாஞ்சில் சிவாஜி எனும் ‘ஜில்’லாக சித்தார்த், தில்லாக இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து கூடவே இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
கதைப்படி, பேச்சில் வல்லவரான சித்தார்த் படம் முழுக்க பேசும் வார்த்தைகள் புரியாது இருப்பது ரசிகனை நெளிய வைக்கிறது. என்றாலும் நடிப்பில் நிறையவே ஸ்கோர் செய்திருப்பதற்காக சித்தார்த்தை பாராட்டலாம்.
சித்தார்த்தின் நண்பர்களாக ஜங் – ஜங்குலிங்கமாக வரும் அவினாஷ்ரகுதேவனுக்கும், ஜக் – ஜாகுவார் ஜகன்னாக வரும் சனந்துக்கும் தனக்கு உரிய முக்கியத்துவத்தை கதையிலும் காட்சி படுத்தலிலும் கொடுத்திருப்பதற்காக தயாரிப்பாளர் சித்துவை பாராட்டலாம்.
ரோலெக்ஸ் ராவுத்தராக வரும் டத்தோ ராதாரவி, தெய்வா எனும் தெய்வநாயகமாக வரும் ஆர்-அமரேந்திரன், அட்டாக் ஆல்பர்ட் டாக வரும் எம்.ஜி.சாய்தீனா, மருந்து -கே.பகவதி பெருமாள், நாசிம்மன் – நாகா, பைந்தமிழ் – பிபின், காளி – ஷரத், ஜக் கின் அப்பா ஆர் எஸ்.சிவாஜி, ராவுத்தர் அடியாள் – விஜய முத்து, குணா-ஆர்.பிரவீன், நடிகை சோனு சாவந்த்தாக வரும் ஜாஸ்மின்பாஸின் உள்ளிட்ட நட்சத்திரங்களில் எல்லோருமே தேவைக்கு அதிகமாக நடித்து ரசிகனின் பொறுமையை சோதிக்கின்றனர்.
ஆறுதல், படம் முழுக்க பின்க் கலரிலும் ஆஷ் கலரி லும் வரும் அந்த இரண்டு ஒல்டு மாடல் கார்கள் மட்டிலும் தான்.
சிவஷங்கரின் கலை இயக்கம், குருட்ஸ் ஸ்னை டரின் படத்தொகுப்பு, ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, தீரஜ் வைத்தியின் எழுத்து ,இயக்கம் உள்ளிட்டவைகளில் ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சிவஷங்கரின் கலை இயக்கமும் திரும்பி பார்க்க வைக்கின்றன.
ஆக மொத்தத்தில், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் காமெடி எனும் போர்வையில் ‘ஜில்.ஜங்.ஜக்’ கடித்திருப்பது டிராஜிடி!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சித்தார்த்!
Tags:
Jil Jung Juk
,
Review
,
சித்தார்த்
,
ராதாரவி
,
ஜில்.ஜங். ஜக்