நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு நடந்த போது அது தமிழ்த் திரையுலக நடிகர்களுக்குள்ளேயே கடுமையான மோதல்களையும், பிரிவினையையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல நடிகர் சங்க கணக்கு விஷயங்கள் தொடர்பாக இன்னமும் முந்தைய நிர்வாகக் குழுவைச் சேர்ந்த சரத்குமார் தரப்பினருக்கும், இன்றைய நிர்வாகக் குழுவைச் சேர்ந்த நாசர் தரப்பினருக்கும் உரசல்கள் இருந்து வருகின்றன.
நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சில தரக்குறைவான விமர்சனங்களும் இருந்தன. அதில் நடிகை ராதிகாவும் கூட சில கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார்.
அதோடு, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் நடிகர் சங்கத் தேர்தலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டதையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன் சிவகுமார் குடும்பத்தினரும், ராதிகா குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரத்தின் போது அவர்களுக்குள் பிரிவுதான் அதிகம் வந்தது என்றும் சொன்னார்கள்.இந்த நிலையில் திடீர் திருப்பமாக சூர்யா தற்போது நடித்து வரும் எஸ் 3 படத்தில் நடிகை ராதிகாவும் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராதிகா, மீண்டும் விசாகப்பட்டிணத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி, சிங்கம் 3 படப்பிடிப்பு, சூர்யா, உங்களுடன் மீண்டும் நடிப்பது மிக்க மகிழ்ச்சி, என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
S3
,
Surya
,
சூர்யா
,
ராதிகா