'ரஜினி முருகன்' படத்துக்கு தன் சம்பளம் மைனஸ் 50 லட்ச ரூபாய் என்று நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த இப்படம் பொங்கல் அன்று திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.
'ரஜினி முருகன்' வெளியானதைத் தொடர்பாக சிவகார்த்திகேயன் பேசும்போது, "'ரஜினி முருகன்' என் வாழ்க்கையில் முக்கியமான படம். படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆனாலும், பல பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் தவித்தது.
உண்மையைச் சொல்லப்போனால் கடந்த 10 மாதங்களாக நான் நிம்மதியாக தூங்கவில்லை. படம் வெளியான அன்று தான் நன்றாக தூங்கினேன்.
இந்தப் படத்தின் நிதிப் பிரச்சினைகளுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனாலும், என் சம்பளத்தை விட்டுக் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் என் சம்பளம் மைனஸ் 50 லட்ச ரூபாய் ஆகிவிட்டது.
சினிமாவில் நான் நடிப்பதே, படம் வெளியாகி ரசிகர்கள் கைதட்டி ரசிகக் வேண்டும், நமக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே, சம்பளம் எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக படவில்லை. என் குடும்பத்திலும் ஏன் சம்பளம் இல்லை என்று கேட்கவில்லை.
என் மனைவி சமீபத்தில் ஒரே ஒரு ஐபோன் மட்டுமே கேட்டார். மற்றபடி கார், வீடு என் எதற்கும் ஆசைப்படவில்லை. இனி, வருங்காலங்களில் என் படங்களில் இது போன்ற நிதிப் பிரச்சினைகள் வராதபடி கவனமாக இருப்பேன்.
ரஜினி, விஜய் இடத்தை பிடிக்க நினைக்கவில்லை. அவர்கள் பல கமர்ஷியல் வெற்றி கொடுத்திருக்கிறார்கள். அந்த படங்களின் சாயல் என் படங்களிலும் இருக்கலாம். ரஜினியின் 'தில்லு முல்லு' ரீமேக்கில் நடிக்க ஆசை. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, காமெடிக்கு முக்கியத்துவமுள்ள காதல் காதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
அடுத்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறேன். மீசை இல்லாத கெட்டப் உட்பட 3 கெட்டப்புகள் உள்ளன. தனுஷ் தயாரிக்கும் படங்கள் நடிக்க நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
Tags:
Cinema
,
Rajinimurugan Review
,
கீர்த்தி சுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரஜினி முருகன்