சென்னையில், நேற்று, 78வது பிறந்த நாளை கொண்டாடிய, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, என் உயிர், சென்னையில் தான் போக வேண்டும், என, கூறினார். நடிகை சரோஜா தேவி, தன் பிறந்த நாளை ஒட்டி, தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக, 5 லட்ச ரூபாயை, நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அளித்தார். பின், அவர் அளித்த பேட்டி
இப்போதெல்லாம் அதிக படங்களில் நடிப்பதில்லையே ஏன்?
என் பிள்ளைகள் சம்மதித்தால் மட்டுமே நடிப்பேன். நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, திரையிலும் அப்படியே காட்ட வேண்டும். நிறைய பேர் நடிக்க கூப்பிடுகின்றனர்; சும்மா வந்து போகும் கதாபாத்திரத்தில் நடிக்க மனம் இல்லை.
முன்னாள் மற்றும் இந்நாள் நடிகர்களை பற்றி?
எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோர், நடிப்பில் ஜாம்பவான்கள். சிவாஜியின், ஒரு நடையிலேயே, பத்து நடைகள் பேசும். திருடாதே, அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்கள், பொன் விழாவை கொண்டாடின; அவர்களுடன் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. இப்போதுள்ள நடிகர்களுக்கு, நடிக்கவும் இயக்குனர்கள் வாய்ப்பு தர வேண்டும். வெறும் சண்டை, பாட்டு மட்டுமே இருந்தால் எப்படி? சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் படங்களின், சிடியை போட்டு பார்த்து இப்போதுள்ள நடிகர்கள், நடிக்க கற்க வேண்டும்.
இப்போதுள்ள நடிகைகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை?
நான் நடித்த போது, புடவையிலேயே, கிளாமரை காட்டியிருப்போம். நடிகைகள் எப்போதும் சுய கவுரவத்தை காக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். எங்களை போன்றவர்களை, பழம்பெரும் நடிகைகள் என கூறுவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் நாங்கள் நடிகர்கள் தான்.
நடிகர் கமல் உங்களிடம் முத்தம் கேட்டாரா.?
பார்த்தால் பசி தீரும் படத்தில் நடித்த போது, கமல் மிகவும் சிறுபிள்ளை. சுட்டியாக இருந்த அவனை நான் உட்பட அனைவரும் முத்தமிட்டு அரவணைப்போம். ஆனால், இப்போது கமல், நடிகைகளுக்கு மட்டுமே முத்தம் தருகிறார். ஒரு முறை நான் அவரிடம், ஏம்பா... நாங்கள் முத்தம் தரலாமா என்றேன்; அவரும், தாராளமாக... நீங்கள் என் அம்மா மாதிரி... எவ்வளவு முத்தம் வேண்டுமானாலும் தரலாம் என்றார்.
அரசியலுக்கு வந்து இருக்கலாமே?
முன்னாள் பிரதமர் ராஜிவ், என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தார்; மைசூரில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அரசியலில் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என்பதால், எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறேன் ஆனால், அரசியல் பதவி மட்டும் வேண்டாம் என, மறுத்து விட்டேன்.
எம்.ஜி.ஆரோடு நடித்த போது சுவாரசியமான அனுபவம் ஏதாவது உண்டா?
நான் ஆணையிட்டால் படப்பிடிப்பு சனிக்கிழமை, இரவு நேரத்தில் நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆர்., வீட்டிலிருந்து வந்த பிரியாணியை சாப்பிட கொடுத்தார். நான், ஆஞ்சநேய பக்தை என கூறி, பிரியாணியை சாப்பிட மறுத்தேன். அவர், இந்த வயதில் இவ்வளவு பக்தியா என, மற்றவர்களிடம் ஆச்சரியத்தோடு கூறினார். ஆனாலும், எம்.ஜி.ஆர்., என்னை விடவில்லை. நள்ளிரவு, 12:00 மணியை கடந்த போது, என்னிடம் வந்து, மீண்டும் பிரியாணியை கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டது; பிரியாணி சாப்பிடலாம் என்றார். ஆனால் நான், சூரியன் வந்தால் தான் மறு நாள் என கூறி, மறுத்து விட்டேன்.
படங்களை இயக்கும் ஆசை உள்ளதா?
சிவாஜி, ஒரு படத்தையாவது இயக்கி இருக்கிறாரா? படத்தை இயக்குவதை விட, கடைசி வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
தமிழ் ரசிகர்கள் பற்றி?
எனக்கு மட்டும் பெங்களூருவில் திருமணம் ஆகவில்லை என்றால், சென்னையில் தான் இருந்திருப்பேன். எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி மறைந்த சென்னையில் தான், என் உயிரும் போக வேண்டும். என்னை நேசித்த தமிழ் ரசிகர்கள் இங்கு அதிகம்.இவ்வாறு நடிகை சரோஜா தேவி கூறினார்.
Tags:
Cinema
,
Kamal Hassan
,
sarojadevi
,
சினிமா
,
சென்னையில் தான் என் உயிர் போக வேண்டும்