சிம்புவின் பீப் பாடல் போல் மேலும் ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் தங்களை ஆபாசமாக வர்ணித்த ரசிகர்களுக்கு நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரும் கண்டனம் தெரிவித்தனர்.
சிம்புவின் ஆபாச பாடல் சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. அதற்குள் நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரின் உடல் அழகை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் வர்ணித்த ரசிகர்கள் மீது 2 பேரும் ஆவேசமாக பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளனர்.
பூஜா, ‘நான் கடவுள்’ படத்தில் நடித்து பிரபலமானவர். பார்வதி மேனன், ‘சென்னையில் ஒருநாள், மரியான்’ படங்களில் நடித்துள்ளார்.
பூஜாவின் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் புகுந்து நீங்கள் பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கருத்து பதிவிட்டு விட்டு தொடர்ந்து அவரது உடல் அழகு பற்றி ஆபாசமாக வர்ணித்துள்ளார். இதுபோல் பார்வதி மேனன் உடல் அழகை இன்னொரு ரசிகர் ஆபாசமாக வர்ணித்தார். இது 2 நடிகைகளையும் கடுமையாக ஆத்திரப்பட வைத்துள்ளது.
ரசிகருக்கு கண்டனம் தெரிவித்து ‘பேஸ்புக்’கில் பூஜா கூறி இருப்பதாவது:–
‘என்னை ஆபாசமாக வர்ணித்த உன்னை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். நாட்டில் செக்ஸ் குற்றங்கள் தினமும் நடக்கின்றன. கற்பழிப்பு சம்பவங்கள். பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை பத்திரிகைகள், டெலிவிஷன்கள் மூலம் அறிகிறோம். அதுமதிரியான ஒரு கற்பழிப்பு குற்றவாளி போல் நீயும் ஆகிவிடக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.
உன் கெட்ட செயல்களை நிறுத்திக்கொள். நீ நல்ல மனிதனாக திருந்துவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. நீ ஒரு பெண்ணிடம் இருந்துதான் வந்து இருக்கிறாய். அது உனது தாய். உனக்கு சகோதரியும் இருக்கலாம். அவளும் பெண்தான். பெண் நண்பர்களும் இருப்பார்கள். அவர்கள் உன்னை மதிக்கிற மாதிரி நடந்து கொள்.
உனக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கலாம் அல்லது ஏற்கனவே திருமணமான நபராகவும் இருக்கலாம். மனைவியானவள் உனக்கு மரியாதை கொடுக்கிற மாதிரி நடந்து கொள். நீ ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகும் போது இந்த உலகத்தில் உள்ள ஆபத்தான ஓநாய்கள், பெண்களை சுற்றும் வக்கிரபுத்தி மனிதர்களிடம் இருந்து அவளை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருப்பாய். இதையெல்லாம் மனதில் வைத்து நல்லவனாக நடந்து கொள் என்று நடிகை பூஜா கூறி உள்ளார்.
பார்வதி மேனன் தன்னை ஆபாசமாக வர்ணித்த ரசிகருக்கு அளித்த பதிலில், ‘‘நீ ஒரு பண்பாடற்ற மனிதனாக இருப்பதற்காக வருத்தப்படுகிறேன். நீ நல்லவனாக நடக்க கற்றுக்கொள். இல்லாவிட்டால் இந்த உலகம் உனக்கு கற்றுக்கொடுக்கும் என்று கண்டித்துள்ளார்.
Tags:
Cinema
,
ஆபாசமாக வர்ணித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகைகள்
,
சினிமா