புகார் அளிக்கப்பட்டதும் நடிகர் சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தால், தற்போது அவரைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் உள்ள அந்தப் பாட்டிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் பேரில் இரு இடங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற அனிருத், இந்தியா திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டார். ஆனால், சிம்பு எங்கிருக்கிறார் என்றே இல்லை. தலைமறைவாக உள்ள சிம்புவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர சிம்பு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஒத்திவைத்து விட்டார். இதனால், சிம்புவைக் கண்டதும் கைது செய்யும் முயற்சிகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிம்புவின் தாயார் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், சிம்புவின் நிலை குறித்து அவர் கண்ணீருடன் பேசி இருந்தார்.
ஆனால், இவ்வாறு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது சிம்பு தான் என்கின்றனர் போலீசார். வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்தவுடன் அவரே நேரில் வந்து விளக்கம் அளித்து சென்றிருந்தால் நாங்கள் தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிம்புவை இப்போது நாங்கள் தேடி கண்டுபிடித்தால் கைது செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும். அவர் வெளிநாடுகளுக்கு இது வரை தப்பிச் செல்லவில்லை. தென் தமிழகத்தில்தான் எங்கேயோ தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த இருக்கிறோம்" என்றார்.
Tags:
Cinema
,
சிம்பு குறித்து போலீஸ் விளக்கம்
,
சினிமா