சன் டி.வி. தனது சன் பிக்சர்ஸ் மூலமாக திரைப்படங்களை தயாரித்து, பிற படங்களையும் விநியோகம் செய்த போது சினிமா உலகை எப்படி ஆட்டிப்படைத்தது என்பதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆனால் தமிழ் மக்கள் மடையர்கள், மறதிக்காரர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆட்சி மாறிய பின் அவர்களது அழிச்சாட்டியம் எத்தகையது என்பது தீபாவளியிலிருந்து புலப்படுகிறது.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அவை சன் டி.வி.க்கு உரிமம் கிடைத்திருந்தால், அவை படு தோல்விப் படமாக இருந்தாலும் ‘சூப்பர் ஹிட் படம்’ என்று கூறி ஒலிபரப்புவார்கள். ‘முதல்வன்’ படம் வெளியான போது எவ்வளவு மிரட்டல், எதிர்ப்பினை திமுக ஆட்சி வெளிப்படுத்தியது என்பதை திரையுலகம் மறந்திருக்க முடியாது. இது போல் பல உதாரணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. எடுத்து விட்டால் தாங்க மாட்டார்கள்.
பண்டிகை நாட்களில் புதிய படங்கள் வெளியாகும் போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் இந்த செயல் மட்டும் மாறாது. மாற்ற நடவடிக்கை என்பது கண்துடைப்பு போலாகி விடும். திமுக ஆட்சிக் காலத்தில் சன்டிவியும், கலைஞர் டிவியும் போட்டி போட்டுக் கொண்டு படங்களை உரிமம் பெறுவதிலிருந்து, திரைப்படக் கலைஞர்களைக் கொண்டு விழாக்கள் நடத்துவது, எந்தப்படம் வெளிவந்தாலும் அதிக கட்டணம் கொள்ளையை கண்டு கொள்வதில்லை என்ற பொதுவுடமைக் கருத்தில் இருந்தார்கள்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆளும் கட்சி சார்ந்த ஜெயா டிவிக்கு படங்கள் உரிமம் தரப்படுகின்றன. சன்டிவி முன் போல் புதிய படங்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஒரு புறம், அப்படியே வாங்கினாலும் குறைந்த விலை தான் தருவது என்று இன்னொருபுறம் இருக்கிறார்கள்.
தீபாவளிக்கு வெளிவந்த அஜீத் நடித்த ‘வேதாளம்’, படத்தின் தொலைக்காட்சி உரிமை ஜெயா டிவிக்கு தரப்பட்டுள்ளது. அதனால் அந்த படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கொள்ளை வசூல் நடக்கிறது என்று சன்டிவி மட்டும் கேமராவைத் தூக்கிக் கொண்டு அலைகிறது. ஆட்சி மாறினால் மட்டுமே இந்த ஞானோதயம் அவர்களுக்கு வரும். கொள்ளை வசூல் நடந்தால் அதை அரசின் கவனத்திற்கு, மக்கள் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு செல்லலாமே. காழ்ப்புணர்ச்சியில் அதை செய்தியாக்க துடிப்பது முறையா?
Tags:
அஜீத்
,
அஜீத்தின் வேதாளம் படத்தின் மீது சன் டீவியின் பாய்ச்சல்
,
சினிமா