சமீபத்தில் ரிலீஸான இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'பாகுபலி' தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் இந்தி மொழியில் பிரமாண்டமான வசூலை தந்தது. இந்தியில் மட்டும் இந்த படத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் கிடைத்துள்ளது. இந்தி நட்சத்திரங்கள் யாரும் நடிக்காத போதிலும், இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றதற்கு படத்தின் பிரமாண்டம் ஒரு காரணமாக இருந்தாலும், சரித்திரக்கதை என்பது இன்னொரு முக்கிய காரணம். சரித்திரக்கதை அம்சம் உள்ள படத்தை உலகம் முழுவதும் விரும்பி ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் இளையதளபதி 'புலி' திரைப்படத்தையும் பாகுபலி பாணியில் இந்தியில் வெளியிட படக்குழு அதிரடியாக முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. விஜய்யின் படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் கேரளாவிலும் தமிழிலேயே இந்த படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் வட இந்தியாவிலும் இந்தியில் டப் செய்து இந்த படத்தை வெளியிட படத்தயாரிப்பாளர்கள் அதிரடியாக முடிவு செய்துள்ளனர். பாலிவுட் திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவி மற்றும் இந்நாள் கனவுக்கன்னி ஸ்ருதிஹாசன் ஆகியோர் இந்த படத்தில் இருப்பதாலும், சரித்திரக்கதை மற்றும் வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாலும், பாகுபலி படத்தை போலவே 'புலி' திரைப்படமும் வட இந்திய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,
Tags:
Cinema
,
சினிமா