புறநானுாறில் கணியன் பூங்குன்றனார் கூறியது போல, இந்த உலகத்தையே தன் வீடாக்கி, உலக மக்கள் அனைவரையும் தன் சகோதரர் போல நினைத்து வாழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி டாக்டர், அப்துல் கலாம்!
தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தில் பிறந்து, தமிழகத்திலேயே படித்து வளர்ந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, 'தும்பா' ராக்கெட் மையத்தில், ஏவுகணை ஆய்வு செய்து, 20 ஆண்டுகள் அங்கேயே பணிபுரிந்து, ஆந்திர மாநிலம், ஐதராபாத் பாதுகாப்பு மையத்தில் பணியாற்றி, அணுகுண்டு ஆய்வு செய்து, பல ராக்கெட்டுகளை விண்ணில் விட்டார்; ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனையில் வெற்றி கண்டார். இறுதியில், வாழ்ந்தது டில்லியில்!
நாட்டின் உயரிய பதவிகளை வகித்து, தன் வாழ்நாளை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காகச் செலவழித்தார்.
'கார்டியாக் அரெஸ்ட்' :
உலகெங்கும் சென்று, பல பல்கலைக் கழகங்களில் உரையாற்றி, பல மருத்துவப் பட்டங்களை பெற்றார். நம்மூரில் உள்ள சிலரைப் போல, கவுரவ டாக்டர் பட்டத்தை, அதிகார துஷ்பிரயோகம் செய்து பெறவில்லை. திடீர் மரணம், 98 சதவீத மாரடைப்பால் தான் வருகிறது. இது, 'கார்டியாக் அரெஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும், கரோனரி ரத்தக் குழாய் அடைப்பால் வருகிறது; ரத்தக் குழாய் அடைப்பை, கெட்டக் கொழுப்பு அடைப்பு என்று தான், பலரும் நினைக்கின்றனர். ஆனால், இந்த அடைப்பு இல்லாமலும் மாரடைப்பு வருகிறது; திடீர் மரணமும் ஏற்படுகிறது.
குளிர் காலங்களில், மலைப்பிரதேசங்களில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும்போது, ரத்தக் குழாய்கள் சுருங்குகிறது; ரத்த அழுத்தம் உயர்கிறது. இதனால், இதய துடிப்பு அதிகமாகி, இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதய துடிப்பு அதிகமாக அதிகமாக, ஒரு நிலையில் இதயம் செயலை நிறுத்தி விடுகிறது! சில ஆண்டுகளுக்கு முன், என் நண்பரின் உறவினர், கொடைக்கானலில் ஓய்வு எடுக்கும்போது திடீர் மரணமடைந்தார். இதற்கு காரணம், குளிர்பிரதேசத்தில் ஏற்படும் ரத்தக் குழாய் சுருக்கம் தான்.என்னிடம் வந்த, குன்னுாரைச் சேர்ந்த பெண்ணுக்கு, ஆஞ்சியோகிராம் செய்ததில், அடைப்பு இல்லை; நன்றாக இருந்தது. அவர் குன்னுாருக்கு சென்ற அடுத்த நாள், திடீர் மரணமடைந்தார்.
மேகாலயாவின் தலைநகர், ஷில்லாங் நகரில் ஒன்றரை லட்சம் எண்ணிக்கையில் மக்கள் வசிக்கின்றனர்; 'கிழக்காசிய ஸ்காட்லாண்ட்' என்றழைக்கப்படும் பகுதி இது. இங்கு சென்ற அப்துல் கலாமுக்கு, குளிர் காரணமாக, ரத்தக் குழாய் சுருக்கம் ஏற்பட்டு, இதயம் நின்று இருக்கலாம். இதில், எந்தவித அறிகுறியோ, வலியோ, மூச்சு முட்டலோ இல்லாமல், மரணம் ஏற்பட்டிருக்க
வாய்ப்புள்ளது.மலைப்பிரதேசத்தில், ஆக்சிஜன் குறைவாக இருக்கும். சராசரி ரத்தத்தில், ஆக்சிஜன், 96- 98 சதவீதம் இருக்க வேண்டும்; ஆக்சிஜன் குறைவான சூழலில், இதயம் செயல் இழக்கிறது. இப்படி தான், அப்துல் கலாமுக்கு திடீர் மரணம் ஏற்பட்டு இருக்கிறது!
எப்போதும், டிசம்பர் மாதம் தான், அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. மருத்துவக் கல்லுாரி இதய மருத்துவமனை நோயாளிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், திடீர் மரணத்தை, ஒரு மணி நேரத்தில், 'பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட்' மூலம் தவிர்க்கலாம் என்று
கண்டறியப்பட்டுள்ளது.மாரடைப்புக்கு காரணமான கரோனரி ரத்த நாளத்தில், 'கொலஸ்ட்ரால்' படிந்த அடைப்பின் மேல், 90 சதவீதம் ரத்த உறைந்து, முழு அடைப்பு ஏற்படுகிறது. இதனால், திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
'கலாம் - ராஜு ஸ்டென்ட்':
இந்த அடைப்பை நீக்க, 'பலுான் ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்யப்படுகிறது. அதன் பின், 'பால்பாயின்ட்' பேனாவில் உள்ள, 'ஸ்பிரிங்' போன்ற, 'ஸ்டென்ட்' வைக்கப்படுகிறது. இது, அடைப்பைத் திறந்து வைக்கிறது. இதனால் நோயாளி பூரண குணமடைகிறார்.
கலாம், ஐதராபாத் பாதுகாப்பு மையத்தில் பணியாற்றிய போது, ஆந்திரா முதல்வர், சந்திரபாபு நாயுடுவுடன் நண்பரானார். அப்போது, ஐதராபாத் அரசு மருத்துவமனையின் தலைமை இதய நோய் நிபுணர் சோமய்யா ராஜுவும், கலாமும் சேர்ந்து, 'ஸ்டென்ட்' தயாரித்தனர். அதன் பெயர், 'கலாம் - ராஜு ஸ்டென்ட்!' இது, 2,000 ரூபாய்க்குள், மலிவு விலையில் கிடைக்கும்.
தற்போது, 'ஸ்டென்ட் மார்க்கெட்' கொடிக்கட்டி பறக்கிறது. இது, பல கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு, 40 சதவீத வருமானத்தைக் கொடுக்கிறது. இன்று, ஸ்டென்ட், 20 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தான், விற்பனையில் முதல் நிலையில் உள்ளது. இதற்கு மருத்துவர்கள் அடிமையாகி விட்டனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு மருத்துவர்கள், ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து, ஓரிரு ஆண்டுகளில், இதய நோய் மாநாட்டில் முடிவைக் கூறி, மேலை நாட்டு மருத்துவர்களை ஒத்துக்கொள்ள வைக்கின்றனர்; இந்த அனுபவத்தை ஏற்று, நம் நாட்டு மருத்துவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கின்றனர். நம் நாட்டில், இத்தகைய
நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.இந்தியாவில் நானும், ஒரு சில மருத்துவர்களும், 1,000 பேருக்கு, இந்த ஸ்டென்டை பொருத்தி இருக்கிறோம். இத்தனை பேரை, இத்தனை ஆண்டு கண்காணித்து ஆய்வு செய்துள்ளோம் என, இந்தியாவில் யாரும், எந்த மாநாட்டிலும்
கூறியதாக சரித்திரம் இல்லை!
காரணம், ஒவ்வொரு மருத்துவரும், வியாபார ரீதியாக, ஒவ்வொரு நிறுவனத்திற்கு அடிமையாகி இருப்பது தான். இப்படிப்பட்ட வியாபார உலகில், 'கலாம் - ராஜு ஸ்டென்ட் சரியல்ல' என்று, இந்த மருத்துவர்களை வைத்தே, வெளிநாட்டு நிறுவனங்கள் சொல்லி விடும். அதிகார வர்க்கமும், ஆட்சியாளர்களும், இத்தகையவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனவா, இல்லையா என்பதை மக்களே பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.அணுசக்தி, ஏவுகணைச் சோதனை ஆகியவற்றை, நாட்டின் பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றுக்காக, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக் கொண்டார். இத்தகைய சோதனையை மேற்கொள்ள, கலாம் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்பது நமக்கு புரிகிறது.
தமிழனாய் பிறந்து, திருவள்ளுவர் நெறியில் நடந்து, இந்தியனாய் வாழ்ந்து, இந்நாட்டிற்கு பெயர் சேர்த்து, இளைஞர்கள் உள்ளத்தில் வாழும் கலாம், சொந்த மண்ணை விட்டு, மலைப்பிரதேசத்தில் உயிர் நீத்தார் என்பதை, கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது!
Tags:
News
,
செய்தி