ரஜினி நடித்து வெளியாகும் படங்களில், உடன் நடிக்கும் நடிகைகளின் நடிப்பு பாராட்டப்படுவது மிகவும் அரிது. ‘படையப்பா’வில் ரம்யாகிருஷ்ணன், ‘மன்னன்’ படத்தில் விஜயசாந்தி, ‘முத்து’ படத்தில் மீனா என இதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.
ஆச்சர்யமாக இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தன்ஷிகா. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அதிக பாராட்டுக்கள் குவிவது தன்ஷிகாவிற்குதான். படம் வெளியாகி தற்பொழுதுவரை ட்விட்டரிலும், நேரிலும் தன்ஷிகாவை பாராட்டித்தள்ளுகிறார்கள் ரசிகர்கள். கபாலியில் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடித்திருக்கிறார். படத்தில் ரஜினியை கொல்வதற்காக வரும் யோகி என்ற கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர், ரஜினியின் மகள் எனத் தெரியவரும்போது தியேட்டர் கைதட்டலில் அதிர்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் தன்ஷிகா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுடைய ட்விட்டுகளையும், பாராட்டுக்களையும் பார்த்தப் பிறகு என்னால் தூங்கமுடியவில்லை. மனதிலிருந்து என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெறும் பாராட்டுகளுக்கெல்லாம் காரணம் ரஞ்சித் மட்டுமே!” என்று தன்ஷிகா அந்த ட்விட்டில் நெகிழ்ந்திருக்கிறார்.
வசூலில் பின்னும் கபாலி
உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ‘கபாலி’ ரிலீஸானது. தமிழகத்தில் திரையிட்ட முதல் நாளிலேயே சுமார் 21.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. உலகளவில் கபாலியின் முதல் நாள் வசூல் 100 கோடி இருக்கும் என்றும் ஆச்சர்யமாக கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
கபாலி
,
சினிமா
,
தன்ஷிகா
,
நெகிழும் தன்ஷிகா
,
படையப்பா
,
ரஜினி