தாரை தப்பட்டை தன் குருநாதருக்காக கொடுத்தார் சசிகுமார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை பேஸ் வாய்ஸில் சொன்னால் தானே அது சசிகுமார் படம்.
அந்த சசிகுமார் எப்போது வருவார் என காத்திருந்த அனைவருக்கும் வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் வெற்றிவேல்.
கதைக்களம்
சசிகுமாரும், ஆனந்த் நாக்கும்( ப்ரேமம் படத்தில் சாய் பல்லவியை திருமணம் செய்வாரே, அவரே தான்) அண்ணன், தம்பிகள். சசிக்கு படிப்பு வராமல் ஆசிரியரான அப்பா இளவரசிடம் திட்டு வாங்கிக்கொண்டே விவசாயத்திற்கு தேவையான உரம் வியாபாரம் பார்க்கின்றார். அதே சமயத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ என்ன செய்வார்களோ அதேபோல் மியா ஜார்ஜை காதலித்து டூயட்டும் பாடி வருகிறார்.
இவரின் தம்பி ஆனந்த் பக்கத்து ஊர் பெண் வருஷாவை காதலிக்கின்றார். வருஷா அந்த ஊர் தலைவர் பிரபுவின் மகள், இருந்தாலும் தம்பி விரும்பிவிட்டான் என்ற காரணத்திற்காக வருஷாவை தன் நண்பர்கள் உதவியுடன் கடத்தும் சமயத்தில் ஆள் மாற்றி நிகிலாவை கடத்துகிறார்கள்.
இதனால் நிகிலாவின் அப்பா தன் மகள் ஓடிப்போயிட்டாள் என ஊர் சொல்வதை கேட்கமுடியாமல் இறக்க சசி வேறு வழியில்லாமல் தன் காதலியான மியா ஜார்ஜை மறந்து நிகிலாவை திருமணம் செய்துக்கொள்கிறார்.
.இருந்தாலும் தன் தம்பி விரும்பிய பெண்ணை எப்படியாவது அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மீண்டும் சசி கிளம்ப, பிரபு ஜாதி, கௌரவம் பார்த்து உடனே தன் தங்கை மகனுக்கு வருஷாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இது தான் சமயம் என பிரபுவின் தங்கை விஜியும் ஒரு பரம்பரை பகை காரணமாக பழிவாங்க இந்த திருமணத்திற்கு சம்மதிக்க இறுதியில் வருஷா யாரை திருமணம் செய்துக்கொண்டார், சசி தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றினாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இந்த சசி தான் சார் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக வலம் வருகின்றார். இதுநாள் வரை நண்பர்களின் காதலுக்கு உதவி செய்த சசி, இதில் தன் தம்பியின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் தவறை உணர்ந்து நிகிலாவை திருமணம் செய்தாலும், அவரின் விருப்பத்தை கேட்காமலேயே அறிந்து அதன் படி நடந்துக்கொள்வது என குடும்பங்கள் கொண்டாடும் கதாபாத்திரம்.
மியா ஜார்ஜ் சசியுடன் பல நேரங்களில் தொலைப்பேசியில் பேசுகிறார். அவ்வளவு தான் பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை, சசியின் நிலை தெரிந்து அவர் காதலை விடும் இடத்தில் மனதில் நிற்கிறார். நிகிலா, வருஷா இருவருமே மிகைப்படுத்தி நடிக்காமல் அவர்கள் கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து செல்கின்றனர்.
படத்தில் இவர்கள் அனைவரையும் விட எல்லோரையும் கவருவது பிரபு, விஜி தான். பிரபு மிகவும் சாந்தமாக இருந்தாலும் கௌரவம் காரணமாக முடிவு எடுத்து பின் தன் தவறை உணர்ந்து வருந்தும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால், படம் முழுவதுமா தவறான முடிவா எடுத்து வருவது? விஜி இவரை தவிர வேறு யாரும் இதுபோல் மிரட்டலாக நடிக்க முடியாது. தன் அண்ணனை பழி வாங்க வேண்டும் என்று கடைசி வரை தன் திமிரை விடாமல் கலக்குகிறார்.
படத்தின் ஹைலேட் நாடோடிகள் டீம் ஒரு காட்சியில் ரிட்டர்ன் ஆவது தான். அவர்கள் பெண்ணை தூக்க வரும் இடத்தில் செய்யும் கலாட்டா தியேட்டரில் அரை மணி நேரத்திற்கு சிரிப்பு சத்தம் தான். டி. இமான் இசையில் ’உன்ன போல’ பாடல் ரசிக்க வைக்கின்றது. பின்னணி இசை கொஞ்சம் சத்தம் அதிகம். கதிரின் ஒளிப்பதிவு தஞ்சையை அழகாக படம் பிடித்துள்ளது.
க்ளாப்ஸ்
சசிகுமார் தன் வழக்கமான நடிப்பிற்கு திரும்பியுள்ளது.தம்பி ராமையா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் அவர் வரும் காட்சி கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை.படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.வசந்த மணியின் வசனங்கள், அதுவும் தற்போதுள்ள கிராம புற குடும்ப வாழ்க்கையில் பேசப்படும் இயல்பான வசனங்களாக ஈர்க்கின்றது.
பல்ப்ஸ்
முதல் பாதியில் அத்தனை வேகத்தை காட்டிய வசந்தமணி இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் தடுமாறுகிறார்.யூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சிகள். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தியிருக்கலாம்.மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ”வெற்றி”வேல் இவர்.
ரேட்டிங்- 2.75/5
Tags:
Review
,
சசிகுமார்
,
சாய் பல்லவி
,
தாரை தப்பட்டை
,
மியா ஜார்ஜ்
,
விமர்சனம்
,
வெற்றிவேல்