ரெமோ விமர்சனம் - Remo Review

10:47 PM |
நடிகர் : சிவகார்த்திகேயன்
நடிகை : கீர்த்தி சுரேஷ்
இயக்குனர் : பாக்கியராஜ் கண்ணன்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
ஓளிப்பதிவு : ஸ்ரீராம் பி சி

சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை.  கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு ஹீரோ தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார்.

இருப்பினும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை உணர்ந்து தான் அடுத்ததாக எடுக்கும் ‘அவ்வை சண்முகி’ படத்தை பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த படத்தில் ஹீரோ லேடி கெட்டப்பில் நடிப்பதாகவும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகேயனுக்குள் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் துளிர்விடுகிறது. எனவே, அவளை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஒருகட்டத்தில், கீர்த்தி சுரேஷை தேடி அவள் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரேஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி கெட்டப் போட்டு சென்று அவரிடம் சென்று நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு பிடிப்பதில்லை. இதனால், சோகத்தில் லேடி கெட்டப்பில் பஸ்ஸில் திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு சில்மிஷம் செய்கிறார்.

இதைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று நினைத்து யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறாள். அவர் நர்ஸ் கெட்டப்பில் இருப்பதை பார்த்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இது தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவள் மனதை மாற்றி திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறார்.

இறுதியில், சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருந்து கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர்ந்தாரா? சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா? என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் சாதாரணமாகவும் லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக நடை, உடை, பாவனை எல்லாம் நன்றாக செய்திருக்கிறார். அதேபோல், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சிகளில் ரசிகர்களின் கிளாப்ஸ் தியேட்டரை அதிர வைக்கிறது.

கீர்த்தி சுரேஷ் இதுவரையிலான படங்களில் ரொம்பவும் அழகாக இருந்தார். இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் கெமிஸ்டரி ஏற்கெனவே ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில், இந்த படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் துருதுரு நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.

சதீஷின் காமெடி படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் காதலுக்கு பச்சை கொடி காட்டும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரின் காமெடியும் பரவாயில்லை. கீர்த்திசுரேஷின் அப்பாவாக வரும் நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரை மட்டுமே முன்னிருத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் படத்தில் நிறைய லாஜிக் மீறல்களும் இருக்கிறது.

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்த வாய்ப்பில் பாதியளவாவது மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல், படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் தனது கலைக் கண்ணால் வண்ணமயமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. முத்துராஜின் அரங்குகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் ‘ரெமோ’ ஜொலிக்கிறான்.
மேலும் வாசிக்க…

இருமுகன் விமர்சனம் - Irumugan Review

11:11 PM |
நடிகர்கள் : விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, ரித்விகா, பாலா, கருணாகரன் மற்றும் பலர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : ஆர்டி. ராஜசேகர்
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீநிவாசன்
இயக்கம் : ஆனந்த் சங்கர்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : ஷிபுதமீன்ஸ்

கதைக்களம்…

ஒரு 75 வயது முதியவர் தனி ஆளாக இந்தியன் எம்பஸியின் அலுவலக ஊழியர்களை தாக்குகிறார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகிறது.

அவரால் எப்படி சாத்தியமானது? அவர் பயன்படுத்திய ஹின்ஹேலரில்  இவ்வளவு பெரிய சக்தி உருவானது எப்படி? என அறிய விக்ரமின் உதவியை நாடுகின்றனர்.

விக்ரமை நாட என்ன காரணம்? அவரின் பிளாஷ்பேக் என்ன? அந்த ஹின்ஹேலரி பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டர்களில் தன்னை மீண்டும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

உடல் அமைப்பில் மாற்றம் இல்லையென்றாலும் உடல் அசைவில் மாற்றம் செய்து ரசிக்க செய்திருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்கிறார். ஹின்ஹேலரை முகர்ந்த பின் வரும் சண்டைகளில் கூடுதல் பலம் தெரிகிறது.

லவ் கேரக்டரில் ஜொலிக்கிறார் விக்ரம். ஆனால் வளவளவென பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது.

வெறும் கிளாமர் மட்டுமில்லை தன்னாலும் ஆக்ஷனிலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நயன்தாரா.

இவரின் கேரக்டர் ஜஸ்ட் ஒரு பாடலில் முடிந்துவிடுகிறதே என் சோர்வடையும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் வந்து சூடேற்றுகிறார்.

திறமையான நடிகை நித்யா மேனனை இதில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவர் இறக்கும்போது கண்கலங்க வைக்கிறார்.

கபாலி ரித்விகாவின் நிலைமை அந்தோ பரிதாபம்.

நாங்களும் இருக்கிறோம் என நாசர், கருணாகரன், தம்பிராமையா வந்து செல்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் படம் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் ஒரு மெலோடி தேவையா?

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா சிறைச்சாலை முதல், ஹேலேனா பாடல்கள் வரை கண்களுக்கு விருந்து.

படத்தின் ப்ளஸ்…

விக்ரமின் இரு மாறுபட்ட நடிப்பு

வித்தியாசமான வில்லன் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள்

மெடிக்கல் துறை மற்றும் எக்ஸ்போர்ட் துறையில் நடக்கும் ஊழல்களை சுட்டி காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்….

லவ்வுல்ல சருக்கலாம். இந்த லவ்வையே சருக்க வச்சிட்ட போன்ற வசனங்கள் அடிக்கடி வருவது சலிப்பை தட்டுகிறது.

அகிலன் மற்றும் லவ் – இரு குரலிலும் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

இன்று செல்போன் உபயோகிப்பவர்கள் பாஸ்வேர்ட்டு போட்டு லாக் செய்துதான் வைக்கின்றனர். ஆனால் விக்ரம் ஈசியாக மற்றவரின் போனை எடுத்து பேசுவது எப்படி எனத் தெரியவில்லை.

முதல்பாதி விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இந்த இருமுகனுக்கு ஹின்ஹேலரை விட எக்ஸ்ட்ரா பவர் கிடைத்திருக்கும்.

இயக்குனர் பற்றி…

அரிமா நம்பியில் கவனம் ஈர்த்த ஆனந்த் சங்கர் இதில் வித்தியாசமான கதையை கையாண்டு இருக்கிறார்.

ஸ்பீடு ஹின்ஹேலர் என்ற புதிய டெக்னிக்கை சொல்லி, அதற்கு ஹிட்லரின் வரலாறையும் சொல்லியிருப்பது கவனிக்க வைக்கிறது.

ஒரு ஸ்டைலிஷ்ஷான கதையை சில லாஜிக் மீறல்களோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இருமுகன்… ஸ்பீடு மகன்
மேலும் வாசிக்க…

வெற்றிவேல் திரை விமர்சனம்- Vetrivel Review

3:43 AM |
தாரை தப்பட்டை தன் குருநாதருக்காக கொடுத்தார் சசிகுமார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை பேஸ் வாய்ஸில் சொன்னால் தானே அது சசிகுமார் படம்.

அந்த சசிகுமார் எப்போது வருவார் என காத்திருந்த அனைவருக்கும் வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் வெற்றிவேல்.

கதைக்களம்

சசிகுமாரும், ஆனந்த் நாக்கும்( ப்ரேமம் படத்தில் சாய் பல்லவியை திருமணம் செய்வாரே, அவரே தான்) அண்ணன், தம்பிகள். சசிக்கு படிப்பு வராமல் ஆசிரியரான அப்பா இளவரசிடம் திட்டு வாங்கிக்கொண்டே விவசாயத்திற்கு தேவையான உரம் வியாபாரம் பார்க்கின்றார். அதே சமயத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ என்ன செய்வார்களோ அதேபோல் மியா ஜார்ஜை காதலித்து டூயட்டும் பாடி வருகிறார்.

இவரின் தம்பி ஆனந்த் பக்கத்து ஊர் பெண் வருஷாவை காதலிக்கின்றார். வருஷா அந்த ஊர் தலைவர் பிரபுவின் மகள், இருந்தாலும் தம்பி விரும்பிவிட்டான் என்ற காரணத்திற்காக வருஷாவை தன் நண்பர்கள் உதவியுடன் கடத்தும் சமயத்தில் ஆள் மாற்றி நிகிலாவை கடத்துகிறார்கள்.

இதனால் நிகிலாவின் அப்பா தன் மகள் ஓடிப்போயிட்டாள் என ஊர் சொல்வதை கேட்கமுடியாமல் இறக்க சசி வேறு வழியில்லாமல் தன் காதலியான மியா ஜார்ஜை மறந்து நிகிலாவை திருமணம் செய்துக்கொள்கிறார்.

.இருந்தாலும் தன் தம்பி விரும்பிய பெண்ணை எப்படியாவது அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மீண்டும் சசி கிளம்ப, பிரபு ஜாதி, கௌரவம் பார்த்து உடனே தன் தங்கை மகனுக்கு வருஷாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இது தான் சமயம் என பிரபுவின் தங்கை விஜியும் ஒரு பரம்பரை பகை காரணமாக பழிவாங்க இந்த திருமணத்திற்கு சம்மதிக்க இறுதியில் வருஷா யாரை திருமணம் செய்துக்கொண்டார், சசி தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இந்த சசி தான் சார் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக வலம் வருகின்றார். இதுநாள் வரை நண்பர்களின் காதலுக்கு உதவி செய்த சசி, இதில் தன் தம்பியின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் தவறை உணர்ந்து நிகிலாவை திருமணம் செய்தாலும், அவரின் விருப்பத்தை கேட்காமலேயே அறிந்து அதன் படி நடந்துக்கொள்வது என குடும்பங்கள் கொண்டாடும் கதாபாத்திரம்.

மியா ஜார்ஜ் சசியுடன் பல நேரங்களில் தொலைப்பேசியில் பேசுகிறார். அவ்வளவு தான் பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை, சசியின் நிலை தெரிந்து அவர் காதலை விடும் இடத்தில் மனதில் நிற்கிறார். நிகிலா, வருஷா இருவருமே மிகைப்படுத்தி நடிக்காமல் அவர்கள் கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து செல்கின்றனர்.

படத்தில் இவர்கள் அனைவரையும் விட எல்லோரையும் கவருவது பிரபு, விஜி தான். பிரபு மிகவும் சாந்தமாக இருந்தாலும் கௌரவம் காரணமாக முடிவு எடுத்து பின் தன் தவறை உணர்ந்து வருந்தும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால், படம் முழுவதுமா தவறான முடிவா எடுத்து வருவது? விஜி இவரை தவிர வேறு யாரும் இதுபோல் மிரட்டலாக நடிக்க முடியாது. தன் அண்ணனை பழி வாங்க வேண்டும் என்று கடைசி வரை தன் திமிரை விடாமல் கலக்குகிறார்.

படத்தின் ஹைலேட் நாடோடிகள் டீம் ஒரு காட்சியில் ரிட்டர்ன் ஆவது தான். அவர்கள் பெண்ணை தூக்க வரும் இடத்தில் செய்யும் கலாட்டா தியேட்டரில் அரை மணி நேரத்திற்கு சிரிப்பு சத்தம் தான். டி. இமான் இசையில் ’உன்ன போல’ பாடல் ரசிக்க வைக்கின்றது. பின்னணி இசை கொஞ்சம் சத்தம் அதிகம். கதிரின் ஒளிப்பதிவு தஞ்சையை அழகாக படம் பிடித்துள்ளது.

க்ளாப்ஸ்

சசிகுமார் தன் வழக்கமான நடிப்பிற்கு திரும்பியுள்ளது.தம்பி ராமையா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் அவர் வரும் காட்சி கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை.படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.வசந்த மணியின் வசனங்கள், அதுவும் தற்போதுள்ள கிராம புற குடும்ப வாழ்க்கையில் பேசப்படும் இயல்பான வசனங்களாக ஈர்க்கின்றது.

பல்ப்ஸ்

முதல் பாதியில் அத்தனை வேகத்தை காட்டிய வசந்தமணி இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் தடுமாறுகிறார்.யூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சிகள். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தியிருக்கலாம்.மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ”வெற்றி”வேல் இவர்.

ரேட்டிங்- 2.75/5
மேலும் வாசிக்க…

ஜித்தன் 2 திரை விமர்சனம் – Jithan 2 Movie Review

5:15 AM |
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜித்தனின் பகுதி இரண்டாக., ஆர் .பி.எம்.சினிமாஸ் ராகுல் தயாரித்து வழங்கி, அவரே இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘ஜித்தன் – 2’.

‘ஜித்தன் ‘படத்தின் க்ளைமாக்ஸில் இறந்து போன நாயகர் ரமேஷ், இதில் உயிருடன் வருகிறார். சற்றே, இன்னசென்டாக காட்சியளிக்கும் சூர்யா எனும் பெயருடைய அவர், இறக்கும் தருவாயில் தன் அப்பா சொன்னபடி, சொந்தமாக ஒரு வீடு வாங்குகிறார்.

கொடைக்கானல் பகுதியில் இருக்கும் எட்டாம் எண் உடைய அந்த வீடு ஒரு பேய் பங்களா. அந்த வீட்டிலிருக்கும் பேய், ரமேஷையும், ரமேஷ் பேய் ஓட்ட கூட்டி வரும் ப்ரண்ட்ஸ், போலீஸ், பெண் மந்திரவாதி உள்ளிட்ட எல்லோரையும் படுத்தும் பாடுதான் ஜித்தன் – 2 படம் மொத்தமும்!

ரமேஷ் – சூர்யாவாக செமயாய் பயந்து பயங்காட்டியிருக்கிறார். நடிப்பு விஷயத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ், ஜித்தன் என்பதை மீண்டும் நிருபித்திருப்பதற்காக பாராட்டலாம்.

பேயாக சிருஷ்டி டாங்கே, மெகாலி, மலையாளபெண் மந்திரவாதி, கருணாஸ், மயில்சாமி, அலட்டல் ஆந்திரா ரவுடியோகி பாபு, சோனா.. ஜார்ஜ், லொள்ளு சபா சுவாமிநாதன், நெல் லை சிவா, வேல்முருகன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர்.

‘சின்னகுட்டி நாத்தனா சிம் கார்டை மாத்தினா….’ பாடல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் செம குத்து. ரீ – ரெக்கார்டிங்கும் பேய் படங்களுக்கே உரிய செம மிரட்டல்! S.K.மிட்செலின் ஒளிப்பதிவும் அப்படியே! படத்தொகுப்பாளர் மாருதி க்ரீஷின் கத்தரி, படத்தில் வரும் பேயை பார்த்து மிரண்டு பல இடங்களில் வேலை செய்ய, கத்தரிக்க மறந்திருப்பது பலவீனம்!

மற்றபடி, வின்சென்ட் செல்வாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராகுலின் இயக்கத்தில் முன்பாதி ஜித்தன் – 2 லாஜிக் இல்லாமல் பயமுறுத்தி இருந்தாலும் பின்பாதி படம் பரவசம்!

லாஜிக் பார்க்க மறந்து போனோ மென்றால், பேயின் மேஜிக் பார்த்து மிரண்டு விட்டு வரலாம்!

மொத்ததில், ”ஜித்தன் – 2′ – ‘மிரட்டும்பேய் சத்தம் டூ ரசிகன்!”
மேலும் வாசிக்க…

புகழ் விமர்சனம் - Pugazh Movie Review

7:42 PM |
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் அரசியல் குறித்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மட்டுமின்றி ஒரு அரசியல் பிரமுகர் தவறு செய்தால் தட்டியும் கேட்க வேண்டும் என்ற கதைக்களத்தில் வெளிவந்துள்ள படம் தான் புகழ்.

ஜெய், சுரபி, RJ பாலாஜி, கருணாஸ் நடிக்க மணிமாறன் படத்தை இயக்கியுள்ளார்.

கதைக்களம்

தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என்று தன் அப்பா, மாமா வளர்ப்பில் வளர்ந்தது மட்டுமின்றி ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக ஜெய் வலம் வருகிறார். சிறு வயதிலிருந்தே தன் ஊரில் இருக்கும் ஒரு மைதானத்தில் ஓடி ஆடி சந்தோஷமாக தன் நண்பர்களுடன் ஜெய் பொழுதை கழிக்கின்றார்.

கல்வி அமைச்சர் அந்த ஊரில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் உதவியுடன் அந்த மைதானத்தை கைப்பற்றி ஒரு பில்டிங் கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஜெய் அது நாங்கள் வாழ்ந்து, விளையாடி வரும் மைதானம் என கங்கனம் கட்டி போராடுகிறார்.

தன் விரலை வைத்து தன் கண்களையே குத்துவது போல், ஜெய்யின் நண்பருக்கு அரசியல் ஆசைகாட்டி மேலும், அவரின் பணத்தேவையை பூர்த்தி செய்து அந்த மைதானத்தை பிடிக்க பார்க்கின்றார்.

ஆனால், எத்தனை சோதனை வந்தாலும் அந்த மைதானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஜெய், இத்தனை பெரிய அரசியலை தாண்டி வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஏற்கனவே இதே சாயலில் சமீபத்தில் மெட்ராஸ், அஞ்சல ஆகிய படங்கள் வந்தாலும், 100 காதல் கதைகள் வந்தாலும் நாம் பார்க்க தான் செய்கின்றோம். அந்த வகையில் இதுபோல் நல்ல கருத்துக்களை கொண்ட படங்கள் ஒரே சாயலில் வந்தாலும் பார்ப்பதற்கு என்ன? என்று தான் தோன்றுகின்றது.

ஜெய் தன் திரைப்பயணத்திலேயே பெஸ்ட் கதாபாத்திரம் என்று கூறலாம், புகழாக ஊரில் எந்த அநியாயம் நடந்தாலும் போராடும் குணமுடையவராகவும், தன்னை கொலை செய்ய முயற்சித்தவன் உன் நண்பன் தான் என பலர் சொல்லியும் கேட்காமல் நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இடத்திலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

சுரபி படத்திற்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறார் என்று தெரியவில்லை, பல காட்சிகளில் ஒட்டாமல் ஏதோ காதல் காட்சிகள் தேவை என்பதற்காக வந்து செல்கின்றார். இதே வரிசையில் தான் RJ பாலாஜி, காமெடி எல்லாம் ஓரங்கட்டி கொஞ்சம் எமோஷ்னல் முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் செட் ஆகவில்லை பாஸ்.

ஒரு தவறு நடந்தால் கண்டிப்பாக இளைஞர்கள் தட்டிக்கேட்க வேண்டும், அது எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் தைரியமாக போராட வேண்டும் என்று ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனர் மணிமாறனுக்கு ஒரு சல்யூட். ஆனால், இதை கமர்ஷியலாக எடுப்பதா? அல்லது ரியலிஸ்டிக்காக எடுப்பதா? என்பதில் கொஞ்சம் தடுமாறியுள்ளார்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படப்பிடித்து அசத்துகின்றது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.

க்ளாப்ஸ்

நல்ல கதைக்களம், இதற்கு நன்றாக பொறுந்திய ஜெய் மற்றும் அவர் நண்பர்களின் கதாபாத்திரம். இவர்கள் அனைவரையும் விட லோக்கல் சேர்மனாக நடித்திருக்கும் வில்லன். பெரியதாக அதட்டலும் இல்லாமல், மேனரிசத்தில் கலக்கியுள்ளார். பல படங்களில் இனி வாய்ப்பு காத்திருக்கின்றது. ஜெய்யின் அண்ணனாக கருணாஸ், இத்தனை யதார்த்தமாக ஒரு அண்ணனை பார்த்திருக்க முடியாது. இனி கருணாஸிற்கு குணசித்திர கதாபாத்திரம் குவிய போகின்றது.

படத்தின் வசனம் பல இடங்களில் கைத்தட்ட வைக்கின்றது. அரசியலை விட வேறு எந்த தொழில் பணம் அதிகம் கிடைக்க போகின்றது. அரசியலுக்கு வாங்க, என்பது போல் பல வசனங்கள். போலிஸை வைத்துக்கொண்டே, போலிஸிற்கு தெரியாமல் மக்களுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறுவது போன்ற காட்சியமைப்புக்கள் நகைச்சுவை தாண்டி நாட்டில் நடக்கும் விஷயத்தை அப்பட்டமாக காட்டுகின்றது.

பல்ப்ஸ்

முன்பே கூறியது போல் படத்தை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகின்றது.
படம் முழுவதும் யதார்த்தமாக சென்று கிளைமேக்ஸில் ஒரு மாஸ் ஹீரோ போல் ஜெய் நடந்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜெய்யின் நண்பர் தன் பதவியை ராஜினாமா செய்தால், தன் சேர்மன் பதவி போய் விடும் என்று தெரிந்தும் கிளைமேக்ஸில் அவரை வில்லன் வெட்ட நினைப்பது என்ன லாஜிக்?

மொத்தத்தில் தவறுகளை தட்டிக்கேட்கும் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ஜெய்யிற்கும் இந்த படம் புகழ் சேர்க்கும்.
மேலும் வாசிக்க…

த்ரிஷா இல்லனா நயன்தாரா – சினிமா விமர்சனம்

2:29 AM |
நடிகர் : ஜி.வி.பிரகாஷ்

நடிகை : ஆனந்தி

இயக்குனர் : ஆதிக்
ரவிச்சந்திரன்

இசை : ஜி.வி.பிரகாஷ்

ஓளிப்பதிவு : ரிச்சர்டு எம்.நாதன்

ஜி.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ஆனந்தி இவர்கள் மூன்று பேரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். இவர்களது குடும்பமும் ஒரே அபார்ட்மெண்டில்தான் வசிக்கின்றன. இவர்கள் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடையே இயல்பான நெருக்கம் ஏற்படுகிறது.
இந்த நெருக்கத்தின் விளைவு, அவர்களுக்குள் காதல் துளிர்விடுகிறது. அதுவும், நிலையான காதலாக இல்லாமல், மாறி மாறி காதல் வயப்படுகின்றனர். ஆனால், அதை யாரும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிளஸ்-2 படிக்கும் சமயத்தில் மனிஷா யாதவ் வெளியூர் சென்றுவிடவே, ஆனந்தி-ஜி.வி.பிரகாஷ் இருவர் மட்டும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது, இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தி காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்கள்.

இந்நிலையில், ஒருநாள் இரண்டு பேரும் தனிமையில் தப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் ஜி.வி. மூலமாக பள்ளி முழுவதும் தெரிந்துவிடுகிறது. அதேநேரத்தில், ஆனந்தியின் அப்பாவுக்கு வெளியூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. ஜி.வி.யை பிரியமுடியாத ஆனந்தி, தன்னால் வெளியூருக்கெல்லாம் வரமுடியாது என அப்பாவுடன் சண்டை போடுகிறாள்.

பின்னர், ஜி.வி.யும் தானும் நெருக்கமாக இருக்க முயற்சி செய்த விஷயம் பள்ளி முழுவதும் தெரிந்ததற்கு ஜி.வி.தான் காரணம் என்பதை அறிந்ததும், அவனை உதறி தள்ளிவிட்டு, அப்பாவுடன் வெளியூர் புறப்படுகிறாள்.
இவள் புறப்படும் சமயம் ஜி.வி.க்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசும், மனிஷா யாதவ் அவனை காதலிப்பதாக கூறுகிறாள். ஆனந்தியை பிரிந்த சோகம் மறைவதற்குள், மனிஷா யாதவிடமிருந்து இப்படி ஒரு ஆஃபர் கிடைத்த சந்தோஷத்தில், ஆனந்தியை உதறி தள்ளிவிட்டு, மனிஷா யாதவ்வை காதலிக்க தொடங்குகிறார். இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.

மனிஷா யாதவ் குடிக்கு அடிமையானவர். இது தெரிந்த ஜி.வி., அவளிடம் குடிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார். ஆனால், ஜி.வி.யின் பேச்சை கண்டுகொள்ளாத மனிஷா யாதவ், அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இரண்டாவது காதலும் பிரிந்த சோகத்தில் தனது சித்தப்பா வி.டி.வி. கணேஷின் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு செல்கிறார்.

அங்கு சென்றதும் தனது முன்னாள் காதலி ஆனந்தியை பார்க்கிறார். அவளிடம் சென்று தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார். ஆனால், ஆனந்தியோ இவரது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை. கடைசியில், ஜி.வி.யின் சித்தப்பாவான வி.டிவி. கணேஷ், ஆனந்திக்கு ஒரு அத்தை இருப்பதாகவும் அவளிடம் சென்றால், உன்னுடைய காதலுக்கு உதவி கிடைக்கும் என்று ஆலோசனை கூறுகிறார்.

ஜி.வி.பிரகாஷும் ஆனந்தியின் அத்தையான சிம்ரனை தேடிச் சென்று தனது காதலுக்கு உதவி கேட்கிறார். இறுதியில், அவர் இவரது காதலுக்கு உதவி செய்து இருவரையும் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதை கலகல நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு ஆழமான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியுமா? என்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். நடிப்பு, டான்ஸ் என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் கைதட்ட வைக்கிறார். அதேபோல், தனது பின்னணி இசையிலும், பாடல்களிலும் இளைஞர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறார்.

நாயகி ஆனந்தி, கண்களால் காதல் பேசி அனைவரையும் கவர்கிறார். இவருடைய நடிப்பு மெச்சும்படியாக இருக்கிறது. மனிஷா யாதவ், கவர்ச்சியில் கலங்கடித்திருக்கிறார். இவர் சரக்கடிப்பதும், ஆண்கள் சரக்கடித்துவிட்டு தன்னிடம் தப்பு செய்யக்கூடாது என்பதற்கு இவர் கூறும் விளக்கத்திற்கும் தியேட்டரில் விசில் பறக்கிறது.

விடிவி கணேஷ் படம் முழுவதும் போதை ஏற்றும் வசனங்களை பேசி சிரிக்க வைக்கிறார். சிம்ரன் கௌரவத் தோற்றத்தில் வந்தாலும் தனது பங்கிற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரோபோ சங்கர், லொள்ளு சபா மனோகர், யூகி சேது ஆகியோரும் படத்திற்கு பெரிய பலமாய் இருந்திருக்கிறார்கள்.
இன்றைய பெண்களின் மனநிலையையும், ஆண்களின் மனநிலையையும் படத்தில் புட்டு புட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இளைஞர்கள் எண்ணத்தை புரிந்துகொண்டு கூடுதலாக பலான விஷயங்களை சேர்த்து விருந்தாக கொடுத்திருக்கிறார். இப்படத்தில் நிறைய வசனங்கள் பச்சை பச்சையாக இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. குடும்பத்துடன் சென்று ரசிக்க முடியாத படமாக கொடுத்திருக்கிறார். இருப்பினும், இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ரசிப்பார்கள்.

ஜி.வி. இசையில் ‘பிட்டு படம்டி’ பாடல் தியேட்டரில் இளைஞர்களை துள்ளி ஆட்டம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையிலும் ஜி.வி.பிரகாஷ் ஸ்கோர் செய்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிக்கும்படி செய்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ரெண்டுமே ருசிதான்.
மேலும் வாசிக்க…

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்

9:50 AM |
நடிகர் : ஆர்யா நடிகை : தமன்னா இயக்குனர் : எம்.ராஜேஷ் இசை : இமான் ஓளிப்பதிவு : நீரவ்ஷா

ஆர்யாவும், சந்தானமும் சிறு வயதிலிருந்தே நகையும் சதையுமாய் இணை பிரியாத நண்பர்களாய் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், சந்தானத்துக்கு பானுவுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அவளை பெண் பார்ப்பது முதல், கல்யாணம், முதல் இரவு வரை ஆர்யா கலாட்ட செய்து கலாய்க்கிறார்.

இவருடைய கலாட்டாவை நண்பன் சந்தானம் ரசித்தாலும், பானுவுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அதனால், ஆர்யாவுடனான நட்பை கைவிடுமாறு சந்தானத்திடம் கூறுகிறாள். அப்படி ஆர்யாவுடன் நட்பை கைவிடாவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அதற்கு 6 மாத காலம் அவகாசம் தருகிறாள்.

மனைவிக்காக ஆர்யாவுடனான நட்பை கைகழுவ சந்தானம் முடிவெடுக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்து தங்களுடைய நட்பை கழட்டிவிட நினைப்பதுபோல், ஆர்யாவுக்கு அவனது வாழ்க்கையில் ஒரு பெண் வந்துவிட்டால் தன்னுடனான நட்பை கழட்டிவிட்டு விடுவான் என்று நினைத்து அவனுக்கு பெண் தேட முடிவெடுக்கிறார்.

திருமணத்தின் மீது ஆசையில்லாத ஆர்யா, சந்தானத்தின் முடிவுக்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்பு சம்மதம் தெரிவிக்கிறார். நயன்தாரா போன்று பெண் கேட்பதால், ஒரு திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்க போகின்றனர்.

அங்கு வேலை செய்யும் தமன்னா பார்த்ததும், நயன்தாரா மாதிரியான பெண் வேண்டும் என்ற கனவை விட்டுவிட்டு தமன்னா மீது காதல் கொள்கிறார். ஆனால், தமன்னாவோ ஆர்யாவின் காதலை ஏற்றுக் கொள்வதாயில்லை.

அவளை காதல் செய்ய ஒத்துக்கொள்ள வைக்க சந்தானமும், ஆர்யாவும் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால், தமன்னாவோ எதற்கும் மனமிறங்கவில்லை. இறுதியில், ஆர்யா தற்கொலை முயற்சிக்கும் துணிய, அதற்கும் தமன்னா எந்தவித ரியாக்சனும் காட்டாதது ஆர்யாவுக்குள் தமன்னா மீது வெறுப்பு வருகிறது.

இறுதியில் அவளை தனது மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, அவளைவிட வேறு ஒரு அழகான பெண்ணை காதலிக்கப் போவதாக சபதம் போட்டுவிட்டு செல்கிறார். கடைசியில், ஆர்யாவின் காதலை தமன்னா புரிந்துகொண்டாரா? சந்தானம்-ஆர்யாவின் நட்பு பிரிந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஆர்யாவுக்கு இந்த படத்தில் மிகவும் அப்பாவித்தனமான கதாபாத்திரம். நண்பனுடன் சேர்ந்து அரட்டையடிப்பது, அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொள்வது என்பது இவருக்கு கைவந்த கலை. அதை இந்த படத்தில் ஆர்யா செவ்வனே செய்திருக்கிறார்.

ஆனால், தமன்னாவிடம் காதல் சொல்லும் காட்சிகளில் எல்லாம் இவர் பல்லை இழித்துக் கொண்டு நடித்ததுதான் ரசிக்கவும் முடியவில்லை. சிரிக்கவும் முடியவில்லை.

ஆர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் சந்தானம் வருகிறார். இப்படத்தில் இவருக்கும் ஒரு ஜோடி. கலாய்ப்பது என்றாலே சந்தானதுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரிதான். அதுவும் இந்த படத்தில் எல்லை மீறி எல்லோரையும் கலாய்த்திருக்கிறார். ஒருசில காமெடிகள் ரசிக்க வைத்தாலும், நிறைய காமெடிகள் சலிப்பைத்தான் கொடுக்கின்றன.

தமன்னா, ஏதோ பொம்மைபோல் படத்தில் வந்து போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். காமெடி இவருக்கு சுத்தமாக எடுபடவில்லை. அதுவும் ராஜேஷ் மாதிரியான முழுநீள காமெடி படம் இயக்குனர்கள் படங்களில் நடிக்க இவர் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்.

சந்தானத்தின் மனைவியாக வரும் பானு, நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பு ஓகேதான் என்றாலும், அவருடைய முகத்தில் முந்தைய படங்களில் பார்த்த பொலிவு இல்லை என்பது வருத்தமே.

தமன்னாவின் தோழியாக வரும் வித்யூலேகாவை சந்தானம் கலாய்க்கும் காட்சிகளில் எல்லாம் விதவிதமாக முகத்தோற்றங்களை காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். கருணாகரன் ஒருசில காட்சிகள்தான் வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் குறைவுதான். சிறப்புத் தோற்றத்தில் வரும் விஷாலை காமெடி போலீசாக மாற்றியிருக்கிறார்கள். இவர் வந்தாலாவது ஏதாவது சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவியாக வரும் ஷகிலா வரும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. ஒரேயொரு காட்சி மட்டும் வந்துவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டு சென்றுவிடுகிறார். நிறைய காட்சிகளை ஆர்யா-சந்தானமே படத்தில் ஆக்கிரமித்துக் கொண்டதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டார்.

இயக்குனர் ராஜேஷ், தனது முந்தைய படங்களின் சாயலிலேயே இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். பார்ட் 1, பார்ட் 2 என்று சொல்லும் அளவுக்கு ஒரேமாதிரியான கதையை எடுத்து ரசிகர்களை போரடிக்க வைத்திருக்கிறார். அதிலும், இந்த படத்தில் கலாய்க்கிறேன் என்று படத்தில் உள்ள மொத்த கதாபாத்திரங்களையும் எந்த நேரமும் கலாய்த்துக் கொண்டேயிருப்பது சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக வெறுப்பைத்தான் கொடுக்கின்றன.

குடி, குடியை கெடுக்கும் என்று டைட்டில் கார்டில் போட்டுவிட்டு, நண்பர்கள் சந்தோஷமாக இருந்தாலும் குடி, சோகத்தில் இருந்தாலும் குடி, மற்றவர்களிடம் பேசும்போதும் குடியை பற்றியே பேச்சு என படம் முழுக்க குடியை சம்பந்தப்படுத்தியே காட்சிகளை எடுத்திருப்பது நெருடலை கொடுக்கிறது.

டி.இமான் இசையில் ‘லக்கா மாட்டிக்கிச்சு’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நான் ரொம்ப பிஸி’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைப்பதோடு, ஆட்டம் போடவும் வைக்கின்றன. பின்னணி இசையிலும் டி.இமான் களைகட்டியிருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கலர்புல்லாக இருக்கிறது. இவரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘வாசுவும் சரவணனும்’ மொக்க நண்பர்கள்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com