விஜய் ஆண்டனி படங்களுக்கு நம்பி போகலாம் என்ற மனநிலையை அவர் ஏற்கனவே மக்கள் மனதில் பதித்து விட்டார். இதை தொடர்ந்து ட்ரைலரிலேயே ஹிட் அடித்து, இன்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் படம் பிச்சைக்காரன். இப்படத்தை இயக்குனர் சசி இயக்க, விஜய் ஆண்டனியே நடித்து தயாரித்துள்ளார்.
கதைக்களம்
சுமார் 900 கோடி சொத்துகளுக்கு அதிபதி விஜய் ஆண்டனி, தனக்கு எல்லாமே தன் அம்மா என்று வாழ்பவர், இவரின் தொழிற்சாலையில் ஒரு நாள் எதிர்ப்பாராத விபத்தால் விஜய் ஆண்டனி அம்மா கோமா நிலைக்கு செல்கிறார்.
இதை தொடர்ந்து ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என எதற்கும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் ஒரு சாமியாரின் அறிவுரையால், 48 நாட்களுக்கு தான் ஒரு கோடிஸ்வரன் என்பதை மறந்து தன் அம்மாவிற்காக பிச்சைக்காரனாக வாழ்கிறார்.
ஒரு பிச்சைக்காரனாக தன்னை தயார்படுத்தி பிச்சை எடுக்கையில், பல பேரின் மூலம் இவருக்கு இன்னல்கள் வருகின்றது. மேலும், விஜய் ஆண்டனியின் மாமா அவரின் சொத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்.
விஜய் ஆண்டனியின் வேண்டுதல் நிறைவேறி அவருடைய அம்மா குணமானாரா? தனக்கு வரும் இன்னல்களை முறியடித்தாரா? என்பதை சசி மிக உணர்ச்சிப்பொங்க கூறியிருக்கிறார்.
படத்தை பற்றிய அலசல்
நாம் இந்த விமர்சனத்தின் முதல் வரியது கூறியது போல் இந்த படமும் விஜய் ஆண்டனியின் ஒரு சிறந்த தேர்வுதான். கோடிஸ்வர வாழ்க்கையில் இருந்து பிச்சைக்காரனாக அவர் மாற எடுக்கும் முயற்சிகள், தன் அம்மாவிற்காக ஏங்கும் மகனாகவும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
சாட்னா ஏற்கனவே சலீம் படத்தில் நடிக்க வேண்டியவர், ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். விஜய் ஆண்டனி ஒரு பிச்சைக்காரன் என்பது தெரியாமல் அவருடன் சேர்ந்து ஊற் சுற்றுகிறார், சந்தோஷமாக காதலிக்க, ஒரு கட்டத்தில் அவரு பிச்சைக்காரன் என்று தெரிந்து அவரை விட்டு விலக நினைத்தாலும், காதலால் அவருடனே பயணிப்பது என ரசிகர்களை கவர்கிறார்.
படத்தின் மிகப்பெரும் பலமே வசனங்கள் தான், பேப்பர் போட்றவன் பேப்பர் காரன், அப்போ பிச்சை போட்றவங்க தான பிச்சைக்காரன், பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் பிச்சை எடுக்கிறார்கள், நாம் கோவிலுக்கு வெளியே பிச்சை எடுக்கின்றோம் என சாட்டையடி வசனங்களை நகைச்சுவையாக கூறியுள்ளனர்.
படத்தின் இசையும் விஜய் ஆண்டனி தான் என்பதால், படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்துள்ளார், தேவையில்லாத பாடல்கள் இல்லாமல் கதைக்கு தேவையான இடத்தில் தான் பாடல்கள் வருகின்றது. பின்னணி இசையிலும் ஜொலிக்கின்றார்.
ஆனால், விஜய் ஆண்டனி தற்போதே முழு மாஸ் ஹீரோவாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும், எத்தனை பேரை நீங்கள் கூட்டி வந்தாலும் அடித்து தும்சம் செய்கிறார், அது தான் கொஞ்சம் யதார்த்தத்தை மீறி நிற்கின்றது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை அழகாக படம்பிடித்துள்ளது.
க்ளாப்ஸ்
சசி இது ஒரு உண்மைக்கதை என்று தான் படத்தை முடிக்கின்றார், இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் மனதுண்டு, என பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை அழுகை, சோகம் என எடுக்காமல் அவர்களுக்கான உலகத்தில் சந்தோஷமாக இருப்பது போல் காட்டியதற்காகவே கைக்கொடுத்து பாராட்டலாம்.
படத்தின் வசனம், இந்த உலகத்தில் பணக்காரன், ஏழை, பிச்சைக்காரன் எல்லோரும்க்கும் ஒரே எதிரி பசி போன்ற வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றது.
காமெடிக்கு என்று படத்தில் யாருமில்லை என்றாலும், விஜய் ஆண்டனியின் மாமா அவருடைய ட்ரைவர் செய்யும் கலாட்டா மற்றும் வில்லன் கேங்கில் பிச்சைக்காரனிடம் அடி வாங்கியது குறித்து பேசும் வசனங்கள் சிரிப்பை வரை வைக்கின்றது.
மேலும் பிச்சைக்காரர்கள், மனநோயளிகளை ஒரு சிலர் தங்கள் சுய நலத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளனர்.
பல்ப்ஸ்
என்ன தான் உண்மைக்கதை என்றாலும் கொஞ்சம் யதார்த்தத்தை விலகி தான் நிற்கின்றது.
விஜய் ஆண்டனி சண்டைக்காட்சிகளில் கையில் யார் கிடைத்தாலும் அடித்து விடுவார் போல. 4வது படத்திலேயே இத்தனை பேரை அடிக்க வேண்டுமா?
இன்னும் ‘நான்’ விஜய் ஆண்ட்னியை மறக்க முடியவில்லை, பல இடங்களில் நான், சலீம் விஜய் ஆண்டனியை நினைவுப்படுத்துகிறார்.
மொத்தத்தில் இந்த பிச்சைக்காரன் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டியவன்.
ரேட்டிங்- 3/5
Tags:
Review
,
சலீம்
,
சாட்னா
,
பிச்சைக்காரன்
,
விஜய் ஆண்டனி