நடிகர் : பிரசாந்த்
நடிகை :அமண்டா
இயக்குனர் : அருண்ராஜ் வர்மா
இசை : தமன்
ஓளிப்பதிவு : சக்தி சரவணன்
பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் நாசர், மனைவி, மகள் மற்றும் மகன் பிரசாந்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து குடும்பத்தை நடத்திவரும் நாசருக்கும், கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறும் மகன் பிரசாந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இது வாக்குவாதமாக மாற, தந்தையிடம் வாய்ச்சவடால் பேசுகிறார் பிரசாந்த். “10 ஆயிரம் கொடுங்கள் அதை 2 மணி நேரத்தில் 1 லட்சமாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று பிரசாந்த் கேட்க, சவாலை ஏற்ற நாசரும் 10 ஆயிரம் ரூபாயை பிரசாந்திடம் கொடுக்கிறார்.
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ‘மேட்ச் பிக்சிங்கில்’ பந்தயம் கட்டுவதற்காக செல்கிறார். அப்போது சோனு சூட் தலைமையில் ஒரு கும்பல் வங்கியில் கொள்ளையடிக்க செல்கிறது. அவர்களிடம் லிப்ட் கேட்டு செல்கிறார் பிரசாந்த்.
அப்போது அவர்களிடம் மேட்ச் பிக்சிங் பற்றி பேசுகிறார் பிரசாந்த். அவர் மூலம் மேட்ச் பிக்சிங் நடக்கும் இடத்தைத் தெரிந்து கொண்ட சோனு சூட் கும்பல், அவரை இறக்கி விட்டதும், போலீசை திசைதிருப்பி வங்கியை கொள்ளையடிப்பதற்காக, மேட்ச் பிக்சிங் நடப்பதை போலீசுக்கு தெரிவிக்கிறார்கள்.
இதனால், போலீஸ் பிடியில் சிக்குகிறார் பிரசாந்த். அவர்களிடம், உங்களை திசை திருப்பி விட்டு அந்த கும்பல் வங்கியில் கொள்ளையடிக்கிறது என்று கூறுகிறார். இதை நம்பாத போலீஸ் பிரசாந்தை அழைத்துக் கொண்டு வங்கிக்கு செல்கிறது. அங்கு கொள்ளைக் கும்பலுக்கும் போலீசுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் சோனு சூட்டின் தம்பி கொல்லப்படுகிறார். சோனு சூட் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார்.
மறுநாளே தப்பிக்கும் சோனு சூட் தன்னை காட்டிக் கொடுத்த பிரசாந்தைக் கொல்ல நினைக்கிறார். சோனு வெளியில் வந்ததை அறிந்த பிரசாந்த் குடும்பத்தினர், பிரசாந்த் இறந்து விட்டதாக பேப்பரில் விளம்பரம் செய்து சோனுவின் எண்ணத்தை திசை திருப்பி விட்டு, பிரசாந்தை கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
கோயம்புத்தூரில் பிரசாந்த், நாயகி அமண்டாவை பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் சோனு சூட், பிரசாந்த் இருவரும் சந்தித்தார்களா? பிரசாந்த், அமண்டா காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்திருந்தாலும், நடனம், சண்டைக்காட்சிகளில் இன்னும் அதே இளமைத் துள்ளலுடனும் அதே புத்துணர்ச்சியுடனும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி அமண்டா நடிப்புக்கு புதுசு என்றாலும் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியால் ரசிகர்களை சூடேற்றியிருக்கிறார்.
தெலுங்கில் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் சாகசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் அருண் ராஜ் வர்மா. தமிழில் இப்படத்தை எடுத்திருந்தாலும் தெலுங்கு சாயல் அதிகம் தெரிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, தெலுங்கில் வந்த அதே காட்சியை அப்படியே வைத்திருக்கிறார்கள். இதை மாற்றியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியிலும் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘சாகசம்’ எடுபடவில்லை.
Tags:
Review
,
அமண்டா
,
சாகசம்
,
நாசர்
,
பிரசாந்த்