லேடி ட்ரீம் சினிமாஸ் சார்பில் பைஜா டாம் தயாரிப்பில் உருவாகி வரும் படம், ‘காத்திருப்போர் பட்டியல்.’ இவர் ஏற்கனவே பரத் நடிப்பில் உருவான ‘யுவன் யுவதி’ என்ற படத்தை தயாரித்தவர். ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் நடித்த சச்சின் கதாநாயகனாகவும், நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
மற்றும் அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், பாலையா டி.ராஜசேகர். இவர், பரத் பாலா இயக்கிய ‘மரியான்’ படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.
‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தை பற்றி இவர் சொல்கிறார்:–
‘‘இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. கதாநாயகி ரெயில் முன்பு பாய்வது போலவும், அவரை கதாநாயகன் காப்பாற்றுவது போலவும் ஒரு காட்சியை படமாக்கினோம். நந்திதா ரெயிலை நோக்கி ஓடினார். அவரை துரத்திக் கொண்டு சச்சின் ஓடி வந்தார்.
குறிப்பிட்ட இடத்தில் நந்திதா விழுவது போல் விலகி ஓடி விட வேண்டும். ரெயில் அவரை கடந்து போய் விடும். ஆனால், குறிப்பிட்ட இடத்துக்கு வரும்போது, நந்திதா கால் இடறி விழுந்து விட்டார். அப்போது, காட்சியில் நடக்க வேண்டிய நிகழ்வு நேரில் நடந்தது. சச்சின் சாமர்த்தியமாக நந்திதாவை தண்டவாளத்தில் இருந்து விலக்கி காப்பாற்றினார். மறக்க முடியாத ‘கிளைமாக்ஸ்’ அது.’’
Tags:
Cinema
,
சினிமா
,
நந்திதா
,
நான் கடவுள்
,
யுவன் யுவதி