நடிகர் அஜீத் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது வேதாளம் திரைப்படம்.
படத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டிய, ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி இல்லாத வேதனையில் விம்மி வருகிறார்கள் ரசிகர்கள்.
எல்லா முன்னணி நடிகரின் படங்கள் ரிலீசாகும்போதும், அவர்களுடைய ரசிகர்களுக்கு என சிறப்புக் காட்சிகளை முதல் நாள் ஒதுக்குவார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். அந்த காட்சியின் டிக்கெட்டை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் மொத்தமாக வாங்கி, மாவட்டம் முழுக்க உள்ள கிளை மன்றங்களுக்குக் கொடுப்பார்கள்.
ஆனால் நடிகர் அஜீத், ரசிகர் மன்றங்களைக் கலைத்து விட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் அவரது ரசிகர்களுக்கு சிறப்புக் காட்சி தர மறுக்கிறார்கள். மேலும், மற்ற நடிகர்களின் ரசிகர்கள், சிறப்புக்காட்சி எடுத்து வருமானம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளதாக ஆதங்கப்படுகிறார்கள் அஜித் மன்ற நிர்வாகிகள்.
அஜீத், மங்காத்தா படம் வருவதற்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். என் ரசிகர்கள், படம் ரிலீசாகும் போது கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
அதற்குச் செய்யும் செலவில் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தைக் கவனியுங்கள். அதுதான் என் ரசிகர்கள் எனக்கும் செய்யும் உதவி! எனக் கூறி, மன்றங்களைக் கலைத்தார்.
ஆனாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து மன்றத்தை நடத்தி வருவதுடன், அவரின் எல்லா படங்களையும் திருவிழா போல் கொண்டாடவும் செய்கின்றனர். அதேபோல் வேதாளம் படத்துக்கும் கட்அவுட் வைத்து பட்டாசு வெடிக்க பரபரப்பாகி வரும் நேரத்தில், ரசிகர் மன்றம் இல்லாத வேதனையும் அவர்களிடம் தெரிகிறது.
Tags:
Cinema
,
அஜீத்
,
சினிமா
,
வேதனையில் அஜித் ரசிகர்கள்