சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் விமர்சனரீதியாக கொண்டாடப்பட்டது.
ஒரு பெண் இயக்குனர் துணிச்சலாக பாக்ஸிங் துறையில் உள்ள பாலியல் அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார், கச்சிதமான திரைக்கதை என்று பாராட்டப்பட்டது.
இறுதிச்சுற்று படத்தை தெலுங்கிலும் சுதா இயக்குகிறார். வெங்கடேஷ் நடிக்க ரித்திகா சிங் தமிழில் செய்த அதே வேடத்தை தெலுங்கிலும் செய்கிறார். ரித்திகா சிங் உண்மையில் ஒரு பாக்ஸர் என்பதும் இறுதிச்சுற்றுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
உண்மையில் இறுதிச்சுற்று படத்தின் கதை கற்பனை அல்ல. சுதா தனது கற்பனையில் எழுதியதும் அல்ல. அது தமிழகத்தைச் சேர்ந்த துளசி ஹெலன் என்ற பெண்ணின் கதை. இவர் பல போட்டிகளில் ரித்திகா சிங்கையே தோற்கடித்துள்ளார்.
விளையாட்டுதுறையில் நிலவும் பாலியல் சுரண்டலை கேள்விகேட்டதால் பல போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளார்.
துளசி ஹெலனின் அக்கா சரஸ்வதி. சுருக்கமாக சரஸ். அவருக்கு காவல்துறையில் சேர வேண்டும் என்று விருப்பம். அதற்காக பாக்சிங் கற்று கொள்கிறார். அவரைப் பார்த்து தங்கை துளசி ஹெலனுக்கும் பாக்சிங்கில் ஆர்வம் வருகிறது. 12 வயதலேயே பாக்சிங்கிற்கு தன்னை அர்ப்பணிக்கிறார்.
இறுதிச்சுற்று படத்தில் வருவது போலவே போட்டிக்கு முன்னால், துளசியின் அக்கா துளிசிக்கு காயத்தை ஏற்படுத்திவிடுகிறார். ஆனாலும், துளசி அந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறார்.
இறுதிச்சுற்று படத்தை எடுக்கும் முன் சுதா துளசியை சந்தித்து அவரது கதையை கேட்டுள்ளார். பிறகு அதே கதையை ரித்திகா சிங்கை வைத்து எடுத்துள்ளார்.
உண்மையில் ரித்திகா சிங்கை பல போட்டிகளில் தோற்கடித்த துளசியின் கதையிது. படத்தைப் பார்த்த பின் சுதாவிடம் துளசி இது குறித்து பேசிய போது, நீ சொன்ன கதையைப் போல் 100 பேர் சொல்றாங்க என்றிருக்கிறார்.
ஒரு பாக்சரின் கதையை சுட்டு இவர்கள் கோடிகளில் சம்பாதித்ததுடன் பெயரும் சம்பாதித்துவிட்டனர். ஆனால், நிஜ பாக்சர் இன்னும் அதே வறுமையில்தான் இருக்கிறார். அவரது கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா சிங் சேம்பியனாகிவிட்டார்.
இறுதிச்சுற்று விளையாட்டுத்துறையில் நடக்கும் மோசடிகளையும், பாலியல் அத்துமீறல்களையும் சொல்லும் படம். அதை படமாக்கிய சுதாவும் அதே மோசடியைத்தான் செய்திருக்கிறார் என்பது கசப்பான உண்மை.
                        Tags:
                      
Cinema
                          , 
                        
இறுதிச்சுற்று
                          , 
                        
சினிமா
                          , 
                        
சுதா
                          , 
                        
துளசி ஹெலன்
                          , 
                        
ரித்திகா சிங்