மலையாள பட உலகின் இளம் நடிகர் நிவீன்பாலி. ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் ‘நேரம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் மலையாளத்தில் போலீஸ் வேடத்தில் ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ என்ற படத்தில் அதிரடி வேடத்தில் நிவீன்பாலி தோன்றினார். போலீசாரையும், அவர்களின் பணி பற்றியும் பல காட்சிகள் உயர்வாக எடுக்கப்பட்டன. இது கேரள போலீசாருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
வழக்கமாக நையாண்டி செய்தும், கிண்டல் அடித்தும் எடுக்கப்படும் போலீசார் பற்றிய காட்சிகள் இல்லாமல் அவர்களை உயர்வாக சித்தரித்த நிவீன்பாலியின் நடிப்பு போலீசாரை மெய்சிலிர்க்க வைத்தது. அவருக்கு பாராட்டு தெரிவிக்க முடிவு செய்த அவர்கள் இந்த தகவலை கேரள உள்துறை மந்திரியும், போலீஸ் இலாகாவை கவனிக்கும் ரமேஷ்சென்னிதலாவிடம் தெரிவித்தனர். உடனே அவர் நடிகர் நிவீன்பாலியை தொடர்பு கொண்டார்.
தலைமை செயலகம் வரும்படி அழைத்தார். அங்கு நிவீன்பாலியை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
போலீஸ் இலாகா அலுவலகத்திற்கு நிவீன்பாலி வந்த தகவல் அறிந்த ஊழியர்கள் அவரை பார்க்க திரண்டனர். அவர்களிடம் நிவீன்பாலி இயல்பாக பேசி உரையாடினார். ஊழியர்கள் அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.
இதுபற்றி நிவீன்பாலி கூறியதாவது:–
போலீசார் கடினமான பணியை செய்து வருகிறார்கள். அவர்களை விமர்சிக்க கூடாது. குறிப்பாக கேரள போலீசார் தங்களின் கடமையை சரிவர செய்கிறார்கள். போலீசார் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வது, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதுபோன்ற வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். தொடர்ந்து பணி செய்யும் அவர்களை எப்போதும் விமர்சிப்பது சரி இல்லை. எனவேதான் நாங்கள் இந்த படத்தில் போலீசாரை பாராட்டியும், அவர்களை உயர்வாகவும் சித்தரித்தோம். இதற்காக என்னை அரசும், போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டியது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வேடத்தில் நடித்ததை நான் உயர்வாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Cinema
,
சினிமா
,
நிவீன்பாலி
,
பிரேமம்