ஆபாசப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவை நீக்கமாட்டோம்; இந்த விவகாரத்தில் நாங்கள் ஏமாற்றியதாக ராதிகா தெரிவித்த விமர்சனத்துக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்புவோம் என்று நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆபாச பாடல் வெளியிட்டதால் நடிகர் சிம்பு பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார்.. அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.தமக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சிம்புவும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை ராதிகா, சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏமாற்றிவிட்டது என கூறியிருந்தார்.
ஆனால் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர், பீப் பாடலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சிம்புவிடம் தனிப்பட்ட முறையில் பலரும் பேசினோம்.ஆனால் சிம்பு தரப்பினர், நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்துக் கொள்கிறோம் என்றனர்.
இந்த பாடல் வெளியாகிவிட்டதால் மன்னிப்பு கேட்டு விட்டால் பிரச்சனை முடிந்துவிடும்; அதன் பின்னர் நடிகர் சங்கம் இந்த விவகாரத்தை கையிலெடுக்க வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறிப் பார்த்தோம். அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இது இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
உண்மை இப்படி இருக்க சிம்புவை ஏமாற்றிவிட்டதாக நடிகை ராதிகா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து அவரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப இன்றைய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றனர்.மேலும் சிம்புவை நடிகர் சங்கத்தில் நீக்க வேண்டும் என்று பல்வேறு கடிதங்கள் வந்துள்ளன; அதுபற்றி இன்றைய செயற்குழுவில் எதுவும் பேசவில்லை; சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Tags:
Cinema
,
சிம்பு நீக்கம் இல்லை ராதிகாவுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்
,
சினிமா