ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘பூலோகம்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். கல்யாண கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படம் வெற்றி பெற்றது குறித்து ஜெயம் ரவி கூறும்போது, ‘‘இந்த வருடம் என்னுடைய நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டுமல்ல, உழைப்பும், பெரியவர்களின் ஆசியும் இருந்தால் மட்டுமே அது நடக்கும். என்னுடைய வெற்றிக்கு உழைப்பும், என் குடும்பத்தாரும் காரணம். என்னுடைய மனைவி எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். அப்பா, அம்மா, அண்ணன் அனைவரும் எப்போதும் என்னுடனே இருக்கிறார்கள். என் அண்ணனுக்கு தனி ஒருவன் ஒரு முக்கியமான படம்.
பூலோகம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பின் போதே நாங்கள் இந்தப் படம் வெற்றி பெரும் என்று கணித்தோம். ஒரு குத்து சண்டை வீரராக தெரிய வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். கடினமான பயிற்சியும் மேற்கொண்டேன். கதாபாத்திரத்திற்காக உழைப்பது எனக்கு பிடிக்கும். என்னுடைய உழைப்பு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘மிருதன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் பிரபு தேவா தயாரிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறேன்’’ என்றார்.
Tags:
Cinema
,
சினிமா
,
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி
,
ஜெயம் ரவி