சிம்பு-அனிருத் ஜோடி வெளியிட்டதாகக் கூறப்படும் பீப் சாங் குறித்து தமிழகம் முழுக்க கண்டன குரல்கள் எழுந்துள்ள நிலையில் ராமேஸ்வரம், தூத்துக்குடி, தேனியில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிம்பு-அனிருத் உருவப் படங்களை எரித்துப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாச நடையில் பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் இணையதளங்களிலும், வாட்ஸ் ஆப்-களிலும் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர் மீது கோவை மாவட்ட மாதர் சங்கத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து சிம்பு மற்றும் அனிருத் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கோவை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிம்பு எழுதிய பாடல் தமிழகம் முழுவதும் வைரலாக பரவியது. இந்த பாடலை கேட்ட பலரும் சிம்பு மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிம்பு, அனிருத் ஆகிய இருவருக்கும் எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு இன்று காலை திரண்ட மாதர் சங்கத்தினர் சிம்புவையும், அனிருத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சிம்பு, அனிருத் உருவ படங்களை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட மாதர் சங்க செயலாளர் செல்வராணி, தலைவர் வடகொரியா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும் பங்கேற்றனர்.
தேனி பங்களாமேடு பகுதியில் சிம்பு, அனிருத்தை கண்டித்து மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இருவரின் உருவபொம்மைகளை எரித்து தங்கள் எதிர்ப்பை அவர்கள் காட்டினர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிம்பு, அனிருத் உருவப் படங்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
படங்கள் இணைப்பு
Tags:
Cinema
,
அனிருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்
,
சிம்பு
,
சினிமா