வானொலியில் லொடலொடவென ஒலித்துக் கொண்டிருந்த குரல் தான். ஆனால், மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது அந்த குரல், பல சமயங்களில் சிந்திக்கவும் வைத்தது. குரலை வைத்தே கண்டறிந்துவிடலாம் அது ஆர்.ஜே.பாலாஜி தான் என்று. 12-ம் வகுப்பில் தோல்வியை தழுவி மீண்டெழுந்த அந்த நபர், இன்று சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார் ஓர் பெரும் கூட்டத்தை சேர்த்து.
தனி நபரின் சக்தி என்ன என்பதை கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் அறிய தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணமான பல ஆயிர கணக்கான மக்களின் வரிசையில் நமக்கு தெரிந்த முகம் என்பதால் முன்னிலையில் நிற்கிறது ஆர்.ஜே.பாலாஜியின் முகம். சென்னை மழை வெள்ளத்தால் குளங்கள் மட்டுமின்றி மக்களின் உள்ளத்திலும் ஈரம் நிறைந்துள்ளது. இனி, ஆர்.ஜே.பாலாஜி பற்றி பலரும் அறியாத தகவல்கள் குறித்து காணலாம்….
சென்னையில் வளர்ந்த பாலாஜி ஓர் ராஜஸ்தானி குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஓர் எதிர்பாராத தருணத்தில் தந்தையால் இவரது குடும்பம் கைவிடப்பட்டது. இவருக்கு எல்லாமே இவரது அம்மா தான். இவரது ஈர்க்கும் பேச்சுக்கும் கூட உரிமையாளர் அம்மா தான் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு இந்து நாளேடுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் 24 வீடுகள் மாறியுள்ளேன் என்றும் 11 பள்ளிகளில் படித்துள்ளேன் என்றும் கூறியிருந்தார். பிறகு தனது அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில், 19 பகுதிகளில் 27 வீடுகள் மாறி மாறி குடியிருந்ததாகவும், 10 பள்ளிகளில் தான் படித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
முதலில் 12-ம் வகுப்பில் தோல்வியை தழுவிய பாலாஜி, மறு தேர்வில் தான் தேர்ச்சிபெற்றார். இவர் கம்ப்யூட்டர் சைன்ஸ் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். பிறகு கோவையில் ஊடகவியல் டிப்ளமோ படிப்பும் பயின்று வந்தார் பாலாஜி.
பிறகு கோவையில் செயல்பட்டு வரும் ரேடியோ மிர்ச்சி எனும் வானொலி நிலையத்தில் ஆர்.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கினார் பாலாஜி. வேலை கிடைத்த பிறகு ஊடகவியல் படிப்பை அவர் தொடரவில்லை என்று கூறப்படுகிறது.
ஹலோ கோயம்புத்தூர்” எனும் காலை நிகழ்ச்சியின் மூலம் தனது ஆர்.ஜே. பயணத்தை தொடங்கினார் ஆர்.ஜே.பாலாஜி. மா.கா.பா.ஆனந்த், செந்தில் போன்ற முன்னணி தமிழ் ஆர்.ஜே.க்கள் எல்லாம் இவருடன் ஆரம்பக் காலத்தில் பணிபுரிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ நான்கு வருடங்கள் கழித்து சென்னைக்கே மீண்டும் சென்றார் பாலாஜி. அங்கு பிக் எப்.எம் வானொலியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். இவரது புகழுக்கு காரணமாக இருந்தது “க்ராஸ் டாக்” எனும் நிகழ்ச்சி.
க்ராஸ் டாக் எனும் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களில் இருந்து கடைக்கோடி குடிமகன் வரை அனைவரயும் கலாய்த்து வந்தார். இது இவரை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
லண்டனில் இதுப் போன்ற ஓர் க்ராஸ் டாக் வானொலி நிகழ்ச்சியின் காரணமாக “Jacintha Saldanha” என்பவர் தற்கொலை செய்துக் கொள்ளவே, தனது க்ராஸ் டாக் நிகழ்ச்சியையும் நிறுத்திவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி.
பிறகு இவர் கையில் எடுத்த நிகழ்ச்சி 120 ரூபா, திரைப்படங்களை ஓர் ரசிகனாக விமர்சிக்க ஆரம்பித்தார் பாலாஜி. ஆனால், ஓரிரு திரைபடங்களின் தயாரிப்பாளர் மிரட்டல் விடுத்ததாலும், சில சர்ச்சைகளினாலும் இவர் 120 ரூபா நிகழ்ச்சியையும் நிறுத்திவிட்டார்.
முகப்புத்தகம், சவுண்ட் க்ளவுட் போன்ற இணையங்களின் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்ற பாலாஜி. சினிமாவிலும் கால் பதித்தார். இவர் நடித்ததில் தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரவடி தான் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவில் முதன் முதலில் ஓர் ஆர்.ஜே-வுக்கு ஐ.ஓ.எஸ் அப்ளிக்கேஷன் வெளியிட்டது பாலாஜிக்கு தான். அந்த ஐ.ஓ.எஸ் அப்ளிக்கேஷனை நடிகர் தனுஷ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார் பாலாஜி. இவருக்கு உதவியாக இவரது நண்பர்களும் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஒன்றாக கைகோர்த்து, சென்னை மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உதவி செய்ய தொடங்கினர். இப்போது இவர்களுடன் சேர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களால் செய்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
Tags:
Cinema
,
ஆர்.ஜே. பாலாஜி பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்
,
சினிமா