தானுண்டு தன் வேலையுண்டு என்று யார் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அவர்களே தமிழ்நாட்டின் செல்லக்குழந்தையாக இருந்தால்…. அவர்களை அரசியல் விடாது.
தம்பி… கம்பி மத்தாப்பூ காட்றேன் வா. என்று இழுக்கும். அதற்கும் மசியாத குழந்தைகளை ஐஸ்கிரீம், சாக்லெட் என்று மயக்கும். அப்பவும் முடியாதா? இருக்கவே இருக்கு பூச்சாண்டி பயம். அதை காட்டுவார்கள் கடைசியாக.
அஜீத்தை பொருத்தவரை இப்போது கம்பி மத்தாப்பூ, சாக்லெட் லெவலில்தான் இருக்கிறார். அவரது முடிவை பொறுத்துதான் பூச்சாண்டி தேவைப்படுவார். இதற்கு முன் பலமுறை அவரை அரசியல் சூழ்ந்து வந்தாலும், அதிகாரப்பூர்வமாக சூழ ஆரம்பித்திருப்பது அண்மைக்காலமாகதான். அதற்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பதும் வேதாளம் திரைப்படம்தான்.
இந்த படத்தின் சென்னை நகர உரிமையை வாங்கிய ஜாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது என்கிறார்கள் அரசியல்வாதிகள். மேலும் தமிழகத்தின் பிற பகுதியை சார்ந்த வேதாளம் விநியோகஸ்தர்களை அழைத்து மொத்த உரிமையையும் நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டதாம் ஜாஸ். சென்னையிலிருக்கும் பதினொரு தியேட்டர்களை இவர்கள் 1000 கோடிக்கு வாங்கியதாக எதிர்கட்சிகளும், இல்லையில்ல அது வெறும் லீசுக்குதான் தரப்பட்டிருக்கிறது. அதுவும் சில வருடங்களுக்கு மட்டும்தான் என்று தியேட்டரை லீசுக்கு விற்றவர்களும் கூறி வர, இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை மக்களுக்கு.
இது ஒருபுறமிருக்க, வேதாளம் படத்தின் கலெக்ஷனையும் ரசிகர்கள் அஜீத் மீது வைத்திருக்கும் பிரியத்தையும் கண் கூடாக கண்டு விட்டது ஜாஸ். இதுவரை சற்று தள்ளி நின்றே அஜீத்தை கவனித்து வந்தவர்களுக்கு மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை நேரடியாகவே கவனிக்க முடிந்தது இந்த வேதாளம் பட விநியோக வாய்ப்பு. ஏன் நாமே ஒரு படத்தை தயாரிக்கக் கூடாது. அதுவும் அஜீத் நடிக்கும் படத்தை? என்கிற எண்ணம் வந்திருக்கிறதாம் ஜாஸ் நிறுவனத்தாருக்கு. இதே டீம் அப்படியே மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்குமே என்பதும் ஜாஸ்சின் திட்டமாக இருக்கிறதாம்.
தங்கள் விருப்பத்தை அஜீத்திடம் தெரிவித்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஜாஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் அஜீத் இணைவதில் பிரச்சனையேயில்லை. ஆனால் படத்தில் தன்னை மீறி சில வசனங்களை உச்சரிக்க வேண்டிய நிலைமைக்கு அவர் தள்ளப்படலாம். ஏனென்றால் இன்னும் ஆறு மாதங்களில் தமிழ்நாடு ஒரு பெரிய தேர்தலை சந்திக்கப் போகிறது.
அந்த நேரத்தில் மாபெரும் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் அஜீத், பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் ஓட்டுதானே? இதனால் அஜீத்தின் தற்போதைய நிலைமை அதிர்ஷ்டகரமானதா? அபாயகரமானதா?
இன்னும் ஆறு மாதத்தில் புரிந்துவிடும்!
Tags:
Cinema
,
அஜீத்
,
அஜீத்தை வளைச்சுப்போட துடிக்கும் அரசியல் கட்சி
,
சினிமா
,
வேதாளம்