தமிழ்த் திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது ‘நானும் ரௌடிதான்’ படத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னால் படம் பற்றி எத்தனையோ வதந்திகள், கிசுகிசுக்கள். ஒரு கட்டத்தில் படம் வெளிவராது என்றெல்லாம் கூட கோலிவுட்டில் செய்திகளைப் பரப்பினார்கள். அவையனைத்தையும் கடந்து படம் வெளிவந்து தற்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே விஜய் சேதுபதிக்கு ஜோடி நயன்தாராவா என்று சில முன்னணி நடிகர்களே கூட ஆச்சரியப்பட்டார்கள். அதன் பின் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நாயகி நயன்தாராவுக்கும் இடையே காதல் என்ற செய்தி பரவ ஆரம்பித்து இன்று வரை ஆதாரப்பூர்வமாக றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அடுத்து சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் தனுஷுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் தகராறு, படத்தை முடிப்பதற்கே நயன்தாராதான் பண உதவி செய்தார் என்றும் செய்திகள் வெளிவந்தது.
இப்படி வெளிவந்த பல பரபரப்பான செய்திகள்தான் இன்று படத்திற்கும் எளிதான விளம்பரமாகவும் ஆகிவிட்டது. அதோடு படமும் நன்றாக இருப்பதால் கடந்த இரண்டு நாட்களிலேயே மிகப் பெரும் தொகை வசூலாகிவிட்டது என்கிறார்கள். இந்தப் படம் யாருக்கு நிம்மதியைத் தருகிறதோ இல்லையோ விஜய் சேதுபதிக்கு மிகப் பெரும் நிம்மதியைத் தரும். ‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக “இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்” என ஆறு தோல்விப் படங்களைக் கொடுத்தார்.
எங்கே ஒரு நல்ல நடிகர் காணாமல் போய்விடுவாரோ என சிலர் அஞ்சவும் செய்தார்கள். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கிவிட்டு ‘நானும் ரௌடிதான்’ படம் இன்று பெரிய வெற்றியைப் பெற்று விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு வாசற் கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இந்த வெற்றியின் சுவடிலேயே விரைவில் ‘இடம் பொருள் ஏவல், மெல்லிசை” ஆகிய படங்கள் வெளிவந்தால் தன்னுடைய மார்க்கெட்டை அவர் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
Tags:
Cinema
,
ஆறு தோல்விக்குப் பிறகு கிடைத்த வெற்றி
,
நயன்தாரா
,
விஜய் சேதுபதி