தமிழ்த்திரையுலகில் மிகவும் மகிழ்ச்சியான கதாநாயகியாக நயன்தாராதான் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு தொடங்கி இந்தப் பத்துமாதங்களில் தமிழில் மட்டும் ஐந்துபடங்கள் வெளியாகியிருக்கின்றன.
உதயநிதியுடன் நடித்த நண்பேன்டா, சூர்யாவிடன் நடித்த மாசு, ஜெயம்ரவியுடன் நடித்த தனிஒருவன், அவரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மாயா, தற்போது விஜயசேதுபதி ஜோடியாக அவர் நடித்திருக்கும் நானும்ரவுடிதான் ஆகிய ஐந்துபடங்கள்தாம் அவை.
இவற்றில் கடைசியாக வெளியான மூன்றுபடங்களும் பெரியவெற்றியைப் பெற்றிருக்கின்றன. தனிஒருவன் படம் பல வசூல்சாதனைகளைப் புரிந்ததோடு நயன்தாராவுக்கு மிகுந்த நற்பெயரைப் பெற்றுத்தந்தது. அதையடுத்து வந்த மாயா படம் அவருடைய மதிப்பை மேலும் உயர்த்தியது.
இப்போது வந்திருக்கும் நானும்ரவுடிதான் படத்திலும் அவருடைய வேடமும் நடிப்பும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மூன்று தொடர்வெற்றிகளைப் பெற்றிருப்பதன் மூலம் அவருக்காக எழுதப்படும் கதைகள் அதிகரித்திருக்கின்றனவாம்.
2005 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். பத்தாண்டுகள் கழித்தும் புதிதாக இருக்கிறார் என்று அவரைப் பற்றிச் சொல்கிறார்கள். சொந்த வாழ்க்கையில் பல சிக்கல்களைச் சந்தித்தபோதும் திரைவாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்கிறார் என்றும் புகழ்கிறார்கள். இதற்கு தொழில்மீது அவர் வைத்திருக்கும் பக்திதான் காரணம் என்கிறார்கள்.
கதைத்தேர்வில் மிகுந்த கவனம் செலுத்துவது, படப்பிடிப்புக்குச் சரியான நேரத்துக்கு வருவது, வந்தாலும் தனக்குப் படப்பிடிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஓய்வறைக்குச் செல்லாமல் தளத்திலேயே இருப்பது, வேடத்தின் தன்மையைப் புரிந்து அதற்கேற்ப நடிப்பது ஆகியனவற்றையே அவருடைய வெற்றிக்கான காரணங்கள் என்று சொல்கிறார்கள்.
Tags:
Cinema
,
காரணம் என்ன?
,
சூர்யா
,
தொடர்வெற்றியில் நயன்தாரா
,
நயன்தாரா
,
நானும்ரவுடிதான்