நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசனுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன. இருவரையும் கௌரவ ஆலோசகர்களாக நியமிக்க ஆலோசனை நடக்கின்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற்றுள்ளது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஷால் அணியை சேர்ந்த கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பிரசன்னா, நந்தா, ரமணா, ஸ்ரீமன், பசுபதி, உதயா, பூச்சிமுருகன், சங்கீதா, சோனியா உள்பட 20 பேர் தேர்வாகியுள்ளார்கள்.
புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த விழாவை, ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட இருக்கிறது.
பொதுக்குழு கூட்டத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்தலாமா?, அல்லது தனியாக நடத்தலாமா? என்று ஆலோசனைகள் நடக்கின்றன. ஓரிரு நாட்களில் பதவி ஏற்பு விழா திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ரஜினிகாந்தை நடிகர் சங்கத்தின் கௌரவ தலைவராகவும், கமல்ஹாசனை கௌரவ ஆலோசகராகவும் நியமிக்கலாமா? அல்லது இருவரையும் கௌரவ ஆலோசகர்களாக நியமிக்கலாமா? என்று நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் சங்க பொதுக்குழுவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பதவிகள் வழங்குவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
Cinema
,
கமல்ஹாசன்
,
நடிகர் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்களாக ரஜினிகாந்த்
,
விஷால்