இளையதளபதி விஜய் நடிப்பில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் கூடிய மிகப்பெரும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் படம் "புலி". இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது, படம் வெளியாகும் நிலையில் உள்ளது.
வெளியாகவிருக்கும் "புலி" படம் பற்றி வெளியான எல்லா செய்திகளையும் முன்னர் சொல்லியிருந்தோம். இந்தநிலையில், படம் வெளியாகவுள்ள நிலையில் திரைக்குப்பின்னால் பணியாற்றிய தொழில்நுட்பக்கலைஞர்களின் சோகநிலை பற்றிய தகவல் மெல்ல வெளியே கசிந்திருக்கின்றது.
நாம் திரையில் பார்க்கும் நடிகர்களின் மாய விம்பங்களுக்குப்பின்னால் ஏராளம் தொழில்நுட்பக்கலைஞர்களதும் பல துணை நடிகர்களினதும் உழைப்பும் வியர்வையும் கொட்டிக்கிடக்கின்றது என்பதே உண்மை. ஆனால், அவர்களில் பெரும்பாலானோருக்கான சம்பளத்தொகை என்னமோ ஒரு சில ஐநூறு, ஆயிரங்களுக்குள் அடங்கிப்போய்விடும். அப்படியிருந்தும், பெரும் பொருட்செலவில் படம் தயாரிக்கும் தரப்போ, அவர்களுக்கான சம்பளத்தை சரியான முறையில் தர முன்வருவதில்லை என்பதுதான் கவலை.
இந்தநிலையில், அதே தவறை விஜய்யின் "புலி" பட தயாரிப்புத்தரப்பு செய்துள்ளது என்பது தான் கொடுமை. படம் ஆரம்பிக்கப்பட்டபோது தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சம்பளத்தை வழங்கிய "புலி" படதயாரிப்புப்பிரிவு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சம்பளம் கொடுப்பதை நிறுத்தியுள்ளது. தற்போது அந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தொகை அரைவாசிக்கும் அதிகம் நிலுவையில் உள்ளதாம்.
இந்தநிலையில், லட்சக்கணக்காக பெருந்தொகைப்பணத்தை சம்பளமாக வாங்கும் படத்தரப்பினர் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய சம்பளம் எந்த நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு விட்டதாம். ஆனால், ஆகக்குறைந்த தொகையை சம்பளமாக வாங்கும் தொழிலாளர்களைத்தான் இவ்வாறு அலைய விட்டிருக்கிறார்கள் "புலி" படத்தரப்பினர்.
இப்படியிருக்க, தயாரிப்புத்தரப்பினரின் இந்தமாதிரியான செயற்பாட்டிற்கு 'இளையதளபதி' விஜய் கூட எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதது அந்தத் தொழிலாளர்களை ரோம்பனே விசனப்பட வைத்துள்ளதாம். அதனால் "அள்ளிக்கொடுக்கும் வள்ளல்கள் போல திரையில் நடிக்கும் நடிகர்கள் நிஜத்தில் எங்களைப்போல வறுமைக்குள் வாடும் தொழிலாளர்களை செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காமல் அலைய விடுகிறார்கள்" என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜய் மேலுள்ள கோபமே இந்தப் புலம்பலுக்கு காரணம் என விஷயம் சொல்லும் கோடம்பாக்கம், இந்த சம்பளப்பிரச்சனை எதிர்வரும் நாட்களில் "புலி" படத்தின் வெளியீட்டிலும் தடங்கலை ஏற்படுத்தலாம் என்று விஜய்யின் வயிற்றில் புளியை கரைக்க வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கிறது.
Tags:
Cinema
,
சினிமா