தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோவில் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில், வெடிகுண்டை வைத்துவிட்டு சென்றதாக சந்தேகத்திற்கு இடமான வாலிபரை தாய்லாந்து போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்உள்ள, பிரம்மதேவன் இந்து கோவில் வளாகத்தில் நேற்று மாலை, மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்திவாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் தங்களுடைய பணிகள் முடிந்து ஏராளமானோர் அந்த பகுதி வழியாக நடந்து சென்றவர்கள் சிக்கிக்கொண்டனர். குண்டு வெடிப்பில் சிக்கியவர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடிப்பில் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 120–க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அந்த பகுதியே ரத்தக்காடாக காட்சியளித்தது. பெரும் பதற்றமும், குழப்பமும் நிலவியது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்தனர். போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். அங்கு பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தாய்லாந்து அரசு கருதுகிறது.
தலைநகர் பாங்காக்கில் இதுவரை பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு முன்னதாக வாலிபர் ஒருவர், தான் கொண்டுவந்த ‘பேக்’ ஒன்றை விட்டுச் சென்றதாகவும், அதிலிருந்து வெடிகுண்டு வெடித்து உள்ளது என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. இதனையடுத்து சந்தேகத்திற்கு இடமான வாலிபை தாய்லாந்து போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பான காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிஉள்ளது. அதில் சந்தேகத்திற்கு இடமான வாலிபரது புகைப்படம் இடம்பெற்று உள்ளது. “நாங்கள் வாலிபரை தேடிவருகிறோம்,” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குண்டு வெடிப்பை தொடர்ந்து தாய்லாந்து மந்திரிசபை கூட்டம் நடைபெற்று உள்ளது. சிலர் இணைந்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்றும் குண்டு வெடிப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அரபு நாட்டை சேர்ந்த வாலிபர் வெடிகுண்டு இருந்த ‘பேக்’கை விட்டு சென்றார் என்று அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் அரசு தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில் வாலிபரின் தேசம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:
News
,
செய்தி