ஏற்கனவே அரசல்புரசலாக செய்திகளில் வெளிவந்த விஷயம்தான்! ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு… கொண்டாடு’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட முத்தரப்பும் இங்குதான் அந்த தப்பும்.
இவ்வளவு பெரிய வெற்றியை குந்தாமல் கூசாமல் அறுவடை செய்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இன்னமும் வேதாளம் படத்தின் டைரக்டருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை. அது ஏதோ கொஞ்ச நஞ்சமல்ல.அவரது சம்பளத்தில் கிட்டதட்ட அறுபது சதம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள். எப்போது கேட்டாலும், தர்றேன் தர்றேன் என்று கூறி வரும் ரத்னம், தனது மகன் ஜோதிகிருஷ்ணாவை மீண்டும் இயக்குனராக்கிவிட்டார். கோபிசந்த் நடிக்கும் தெலுங்குப்படம் ஒன்றை இயக்குவதற்காக பூஜை போட்டுவிட்டார் ஜோதி.
இப்படி தன் பிள்ளை ஜோதியை ஜெகஜ்ஜோதியாக்கிய ஏ.எம்.ரத்னம், டைரக்டருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தருவதுதானே முறை? விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கெல்லாம் வெயிட்டான அட்வான்ஸ் கொடுத்து அவர்களை ரிசர்வ் செய்து வைத்திருக்கும் அவர், ஏன் சிவாவை மட்டும் கைகழுவி வருகிறார் என்பதுதான் மர்மமாக இருக்கிறது என்கிற புலம்பல் சப்தம் ஒலிக்கிறது இயக்குனர் சங்க ஏரியாவில்.
“பேசாம அஜீத் சார்ட்ட சொல்லிப்பாருங்களேன்” என்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள். “ம்ஹும்… அவரே ஆபரேஷன் பண்ணிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கார். இந்த நேரத்துல நம்ம பிரச்சனையை அவர் காதுக்குக் கொண்டுபோய் அவருக்கு தர்ம சங்கடம் தரக்கூடாது” என்கிறாராம் சிவா.
பஞ்சாயத்தை கூட்டலேன்னா பஞ்சுமிட்டாய் கூட கிடைக்காது என்பதுதான் கடந்தகால களேபரம்!
Tags:
Cinema
,
அஜீத்துக்கு சொல்ல வேணாம்
,
சிவா
,
சினிமா
,
வேதாளம்