'இனி சாமி கும்பிடமாட்டேன்!' - நகைச்சுவை நடிகர் மதுரை முத்து உருக்கம்..!!

2:41 AM |
மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகமாகவே அமைந்து விடுகிறது. நடிகர் விவேக் தன் மகனை இழந்த சோகம் மறைவதற்குள், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் நகைச்சுவை நடிகர் 'மதுரை' முத்து தன் மனைவியை இழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

மனைவி வையம்மாள் தனக்காகவும்,  தங்களின் குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்தவர் என கண்ணீர் விடுகிறார் 'மதுரை' முத்து.

சோகத்தில் இருந்தவரை ஆற்றுப்படுத்திவிட்டுப் பேசினோம்.

“நானும் மூன்று முறை பெரிய சாலை விபத்துகளில் சிக்கியிருக்கிறேன். மூன்று முறையும் என் மனைவியின் கடவுள் பக்திதான் என்னை காப்பாற்றியது. ஆனால் அந்த பக்தி அவளை காப்பாற்றவில்லை என்பது பெரும் வேதனையை தருகிறது. என் மனைவி விபத்தில் உயிரிழந்த சமயம் நான் ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு எனக்கு 'அம்மை' தாக்கியிருந்தது. வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தாலும், தினம் தவறாமல் என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் போனில் பேசிவிடுவேன்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி என் மனைவியிடம் பேசும்போது, எனக்கு அம்மை தாக்கியுள்ளதாக சொன்னபோது துடித்துப்போனாள்.  எனக்கு ஆறுதல் சொன்னதுடன், அன்று இரவிலிருந்து 3-ம் தேதி காலை 5.30 மணிவரை எனக்காக பூஜை செய்துள்ளார். மேலும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று எனக்காக சிறப்பு பூஜை செய்ய, காரில் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்த கொடிய சாலை விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டாள்.

மதுரையில் நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில்தான் அவளை முதன்முறையா சந்திச்சேன். அவரது குணம் பிடித்ததால் நண்பர்களானோம். அதுவே பின்னர் காதலாகி, தம்பதிகளானோம். கல்யாணத்திற்குப் பிறகு எனக்காகவும், எங்கள் குழந்தைகளுக்காகவும் தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சிக்கிட்டவங்க, என்னோட மனைவி வையம்மாள். அவங்களுக்கு கடவுள் பக்தி அதிகம். காளி பக்தை. எப்போ பார்த்தாலும் சாமி கும்பிட்டுகிட்டே இருப்பாங்க; தினமும் எதாவது ஒரு கோயிலுக்கு போயிடுவாங்க.

முறையா சங்கீதம் கத்துக்கிட்ட என் மனைவி, நல்லா பாடுவாங்க. எனக்காகவே வாழ்ந்த என் மனைவியை ஐந்துமுறை  வெளிநாடுகளுக்கு கூட்டிட்டுப் போனதை தவிர, நான் வேற எதுவும் செய்யவே இல்லை. நான் இன்னும் பெரிய அளவில் சாதித்து, என் மனைவியை காலம் முழுக்க சந்தோஷமாக வெச்சிருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, கடவுள் அதற்கு வழிகொடுக்கலை. இப்போ அவளை இழந்து தவிக்கிறேன்” என்றார் கண்ணீர் விட்டபடி.

நான் வழக்கமா பயன்படுத்தற காரினால் எனக்கு அடிக்கடி முதுகு வலி வரும். இதனால், வர பிப்ரவரி 15-ம் தேதி எங்க திருமண நாளன்று எனக்கு ஆடி சொகுசு கார் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்திருந்தாராம் என் மனைவி. அது இப்போதுதான் தெரியவந்தது. ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்வது என் மனைவிக்கு பிடித்தமான விஷயம். அதனால் என் மனைவிக்கு நானும் இன்ப அதிர்ச்சி கொடுக்க எங்க திருமண நாளன்று நிறைய ஏழைக் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைச்சு சாப்பாடு போடணும்னு நான் நினைச்சிருந்தேன். சின்னத்திரையில் புகழ்பெற்ற காமெடியனான நான், சினிமாவிலும் பெரிய அளவில் வர வேண்டும் என்பதுதான் என் மனைவியின் ஒரே ஆசை.

ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் மதுரையில கார்டனோட பெரிய வீடு ஒன்றைக் கட்டினோம். என் மனைவிதான் பார்த்து பார்த்து வீட்டைக் கட்டினாங்க. ஆனா, இந்த வீட்டுல சந்தோஷமா வாழ்றதுக்கு என் மனைவிக்கு கொடுத்துவைக்கலை. என் மனைவியும், குழந்தைகளும்தான் என் முதல் ரசிகர்கள். அதனால வீட்டில் தினமும் காமெடி செய்து, அவர்களைத்தான் முதலில் திருப்திப்படுத்துவேன். 'தன்னைச் சுற்றி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியின் அடியில் எப்போதும் இருட்டாகத்தான் இருக்கும்'. தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நேரடியாகவும், தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் மகிழ்விக்கும் என்னைப் போன்ற நகைச்சுவை கலைஞர்களுக்கும் அந்தநிலைதான்.

எந்த நேரமும் கடவுளையே கும்பிட்டுக்கொண்டு இருந்த என் மனைவியை ஒரு கடவுளும் காப்பாத்தலையே என்பதுதான் என் கோபம். அதனால் இனி எந்த கடவுளையும் நான் கும்பிடப்போறதில்லை. எங்க வீட்டுல என் மனைவிக்கு கோயில் கட்டி, என் மனைவியோட சிலையை வெச்சுதான் இனி நான் கும்பிடப்போறேன். அவதான் இனி எனக்கு தெய்வம்” என்கிற மதுரை முத்து சற்று இடைவெளி விட்டு பேசுகிறார்.

“என் இரண்டு பொண்ணுகளுக்கும் இன்னும் என் மனைவி இறந்த விஷயமே முழுசா தெரியாதுங்கறது கொடுமை. 'அம்மா எங்கப்பா... எப்போ வருவாங்க?' னு அவங்க கேட்கிற கேள்விகளுக்கு என்ன சொல்றதுன்னெ தெரியாம அழுதுட்டிருக்கேன். 'அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க'ன்னு சொல்லி சமாளிச்சிக்கிட்டு வர்றேன். குழந்தைகளுக்கு அம்மா இறந்துட்டாங்கன்னு எப்படி புரியவைக்கிறதுன்னே தெரியலை; இன்னும் எத்தனை நாளைக்குதான் அம்மாவோட முகத்தை காட்டாம சமாளிக்கப் போறேன்னும் தெரியலை” என கண்கலங்கியவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
மேலும் வாசிக்க…

இறந்த மனைவியை பார்க்க முடியாமல் தவிக்கும் மதுரை முத்து..!!

1:17 AM |
பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி; அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து

தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து, அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார்.

மதுரை முத்து, மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர். பிரபல நகைச்சுவையாளரான இவர், ‘அசத்தப்போவது யாரு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

1200க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து, வையம்மாள் (32). தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார்.

இந் நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் வியாழக்கிழமை காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, அக் காரின் இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதியும் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவி இறந்த துயரத்திலுள்ள மதுரை முத்துவுக்கு மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட போது மதுரை முத்து கலை நிகழ்ச்சியொன்றுக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.

மனைவி இறந்த செய்தி அறிந்ததும் தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மதுரை முத்து தீர்மானித்தார். ஆனால், அது உடனடியாக சாத்தியமாகவில்லை. அங்கு அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் மதுரை முத்து உடனடியாக நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளார். ஏனெனில், அமெரிக்க விதிகளின்படி அம்மை நோயுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

இந் நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மதுரை முத்துவுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்மை நோய் குணமான பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து, மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றமை அவரின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி..!!

9:47 PM |
தனியார் தொலைக்காட்சி நடத்திய அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.

மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (வயது32). இவர்கள் மதுரை தனக்கன்குளத்தில் வசித்து வந்தனர். நிகழ்ச்சி ஒன்றிற்காக மதுரை முத்து வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு சென்று வர வையம்மாள் திட்டமிட்டார்.

இன்று (வியாழக்கிழமை) காலை அவர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுள்ளார். அந்த காரை டிரைவர் கண்ணன் (32) ஓட்டி சென்றார். காலை 7 மணியளவில் திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார் சென்றபோது எதிர் பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் காரில் இருந்த வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். பலத்த காயம் அடைந்த டிரைவர் கண்ணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com