தமிழ் சினிமாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு ஹீரோக்களே தங்களைத் தக்க வைத்துக் கொள்ள தண்ணி குடிக்குற காலம் இது. சினிமா பின்னணி இல்லாத சிவகார்த்திகேயனோ மெரினா தொடங்கி ரெமோ வரை 9 படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்திருக்கிறார். அதுதான் இங்கு பிரச்சினை. வேற்று மொழி நடிகர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வாழ்த்து பா வாசிக்கும் மீடியா முதல் திரைப்பட துறையினர் வரை சிவகார்த்திகேயனுக்கு எதிரான நிலை எடுத்துள்ளனர். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், ஞானவேல் ராஜா இவர்களிடம் பணியாற்றிய ராஜாவும், சினிமா சூட்சமம் தெரியாத சிவகார்த்திகேயனும் இணைந்து பணிபுரிவது நாட்டாமைத் தனம் புரியும் தயாரிப்பாளர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
நெருக்கடிக்களை கடந்து அக்டோபர் 7ல் திட்டமிட்டபடி ரெமோ ரீலீஸ் ஆகி தமிழகத்தில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சக்சஸ் மீட் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நன்றி கூற வந்த சிவகார்த்திகேயன், "எங்களை வேலை செய்ய விடுங்கள், ரெமோ ரீலீஸ் வரைக்கும் எம்புட்டு தொந்தரவுதான் கொடுப்பீங்க... இந்தப் படத்துல நடிச்சப்ப ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைச்சேன். அந்த வலியைக் கூட தாங்க முடிஞ்சது.
ஆனா படத்துக்கு எதிராக சிலர் கொடுத்த தொல்லையால் வந்த மன வலியைத்தான் தாங்க முடியவில்லை," என உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க, ஒட்டுமொத்த தமிழகமே தொலைக்காட்சி நேரலையில் பார்த்து, சிவகார்த்திகேயன் மீது பரிதாபத்தை வரவழைத்தது.அப்படி என்னதான் சிவகார்த்திகேயன்-ராஜா இருவருக்கும் நெருக்கடி என விசாரித்த போது பொன்ராம் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த 'ரஜினி முருகன்' பட ரீலீஸில் இருந்து தொடங்குகிறது பிரச்சினை தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக முறை ரீலீஸ் திகதி அறிவிக்கப்பட்ட படம் ரஜினி முருகன். இந்தப் படத்தின் பட்ஜெட் குறைவு, வியாபாரம் அதிகம். திருப்பதி பிரதர்ஸ் ஏற்கெனவே தயாரித்த படங்கள் சம்பந்தமாக நிதிப் பிரச்சினை, அதனால் 'ரஜினி முருகன்' முடங்கியது.
'ரெமோ' பட வேலைகள் தொடங்கப்பட்ட நேரம் திரையுலக நிதி, விநியோக நாட்டாமைகள் ஒன்று கூடினர். லிங்குசாமி தர வேண்டிய கடனை வசூலிக்க சிவகார்த்திகேயனை நெருக்கினார்கள். 'நான் படத்தின் நடிகன். இந்தப் பிரச்சினைக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?' என கேள்வியெழுபினார் சிவா.
'ரஜினி முருகன் ரிலீஸ் ஆகவில்லை என்றால் நீ நடிக்கும் எந்த படங்களை ரீலீஸ் செய்ய விட மாட்டோம்' என விநியோகஸ்தர்களால் சிவகார்த்திகேயன் மிரட்டப்பட்டார். வேறு வழி இன்றி ரஜினி முருகன் படத்திற்கு வாங்கிய சம்பளத்துடன் கூடுதலாக ஒரு தொகையைக் கொடுத்த பின்னர்தான் படம் வெளியா ஆனது. படம் சூப்பர் ஹிட்டடித்து. இது பஞ்சாயத்து நாட்டாமைகள் எதிர்பார்க்காத ஒன்று. ரஜினி முருகன் பட ரீலீஸ் விஷயத்தில் தான் அவமானபடுத்தப்பட்டது, ஏமாற்றப்பட்டதாகக் கருதிய சிவகார்த்திகேயன், இனி வெளி நபர்களுக்கு படம் நடிப்பது இல்லை என்ற முடிவு எடுத்ததின் காரணமாக ரெமோவை தொடர்ந்து அந் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து 3 படங்கள் தயாரிப்பது சம்பந்தமாக அறிவிப்பு வெளியாகிறது.
ரெமோ படம் ரீலீஸ் திகதி நெருங்கும் சமயத்தில் நாட்டாமைகள் கூடுகிறார்கள். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட அடிப்படையில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ், ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்களுக்கு படம் நடித்து விட்டுத் தான் பிறபடங்களில் நடிக்க வேண்டும் என பஞ்சாயத்து தொடங்குகிறது. வேந்தர் மூவீஸ் உடன் எனக்கு ஒப்பந்தம் கிடையாது என சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்பட்டு நிராகரிக்கப்படுகிறது.
"எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் 50 லட்சம் அட்வான்ஸ் எனக்கு கொடுத்தது உண்மை அதில் 25 லட்சம் ரூபாய் திருப்பி வாங்கி விட்டார். தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி சம்பளம் கொடுத்தால், என் வசதிப்படிதான் திகதி தருவேன்," என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது சிவகார்த்திகேயன் தரப்பில் இதே போன்று ஸ்டுடியோ கிரின் உடனான ஒப்பந்தப்படி தற்போதய மார்கெட் நிலவரத்தில் சம்பளம் தர ஞானவேல்ராஜா சம்மதம் தெரிவித்ததால் தன் வசதிப்படி திகதி தருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளாராம். இதன் பின்னரும் வேந்தர் மூவீஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இருவருக்கும் திகதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த படம் சூட்டிங்குக்கு பெப்சி ஒத்துழைப்பு தராது என மிரட்டல் விடுக்கப்பட்டது.
அக்டோபர் 5ல் தொடங்க வேண்டிய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.இருப்பினும் பெப்சி ஒத்துழைக்காவிட்டாலும் ஏற்கெனவே விருப்பபட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தலாம் அதை யாரும் தடுக்க முடியாது எனும் உயர் நீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பை கையில் எடுத்திருக்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு. இன்னொரு முக்கியமான விஷயம்...
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்தப் படத்துக்குமே பெரிதாக சம்பளம் வாங்கியதே இல்லையாம். அவ்வப்போது ஒரு தொகையைத் தருவார்களாம். மறுபேச்சின்றி வாங்கிக் கொள்வாராம் சிவகார்த்திகேயன். முதல் முறையாக அவர் கை நிறைய சம்பளம் என்று வாங்கியதே ரெமோ படத்துக்காகத்தானாம்.சிவகார்த்திகேயனின் நிலைமையைப் புரிந்து அவருக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு மற்றும் மூத்த விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் போன்றவர்கள்.
இந்த பாதிப்பு, மன அழுத்தம் காரணமாகவே ரெமோ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் எமோ சனல் ஆனதாக கூறுகிறார்கள் அவர் நலம் விரும்பிகள். நடந்த திரைமறைவு நிகழ்வுகளை பகிரங்கப் படுத்தினால் பல திரையுலக பிரமுகர்கள் வக்கிரம், வஞ்சகமுகம் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் சிவகார்த்திகேயன் ஊடகங்கள் முன் மனம் திறந்து பேசுவாரா?
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயன்
,
சிவா
,
சினிமா
,
மறுபக்கம்
,
ரஜினி முருகன்
,
ரெமோ