குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்ப்பில் டி.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘முத்துராமலிங்கம்’. கெளதம் கார்த்திக் நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்து வரும் இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கிவருகிறார். இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவோடு இந்தப்படத்தில் பஞ்சுஅருணாசலம் இணைகிறார் என்பதும் படத்துக்குப் பெரிய விளம்பரமாக அமைந்துவிட்டது.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது தயாரிப்பு தரப்பின் சொதப்பல் காரணமாக முதல்கட்டப் படப்பிடிப்போடு நிற்கிறதாம் படம். மேற்கொண்டு படத்தை தொடருவார்களா? என்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் முதல் கட்டப் படப்பிடிப்பின் போதே படக்குழுவினருக்கு உரிய வசதிகளைத் தயாரிப்பு தரப்பு செய்து தரவில்லையாம்.
அதோடு படப்பிடிப்பு முடித்துவிட்டு எல்லோரும் கிளம்புகிற நேரத்தில், படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணம் உட்பட கடைசிநேரத்தில் கொடுக்கவேண்டிய தொகையை தயாரிப்புத் தரப்பு கொடுக்கவில்லையாம். இதனால் கட்டணத்தை கொடுத்து விட்டு கிளம்புமாறு ஹோட்டல் தரப்பு கூறிவிட, படக்குழு செய்வதறியாமல் தவித்து நின்றதாம்.
இந்த செய்தி நாயகி பிரியா ஆனந்தின் காதுகளை எட்ட அவர் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய வங்கியிலிருந்து பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்டிருக்கிறார். படம் மேற்கொண்டு வளருமா? என்பதே சந்தேகம்தான் என்ற நிலையில் துளி கூட கவலைப்படாமல், தனது பணத்தைக் கொடுத்த பிரியா ஆனந்தின் செயல் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
வந்தோமா..? நடித்தோமா..? காசை வாங்கினோமா..? என்று இருக்கும் பல நடிகைகள் மத்தியில் இப்படி ஒரு நடிகையா..?
Tags:
Cinema
,
இளையராஜா
,
கெளதம் கார்த்திக்
,
சினிமா
,
பிரியா ஆனந்த்
,
முத்துராமலிங்கம்