நடிகர் சூர்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மழை வெள்ளம் சென்னையின் புதிய அடையாளமாக மாறி இருக்கிறது. நிறைய மக்கள் கஷ்டப்பட்டனர். அப்போது நாங்கள் இருக்கிறோம் என்று இளைஞர்கள் போர்க்குணத்தோடு வெளியே வந்தனர். கழுத்தளவு தண்ணீரில் வீடு வீடாக சென்று பால் பாக்கெட்டுகள், தண்ணீர், உணவு போன்றவற்றை கொடுத்தார்கள். முகம் தெரியாத பலபேர் உதவினார்கள். அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன். ‘அகரம் பவுண்டேஷன்’ மூலம் நிவாரண பணிகள் நடந்து வருகிறது.
நான் தயாரித்துள்ள ‘பசங்க-2’ படம் வருகிற 24-ந் தேதி வெளியாகிறது. நல்ல கதை ஒன்றை படமாக தயாரிக்க முடிவு செய்து காத்திருந்தேன். அப்போது பாண்டிராஜ் இந்த படத்தின் கதையை சொன்னார். ரொம்ப பிடித்தது. உடனே தயாரிக்க முடிவு செய்தேன். என் குழந்தைப் பருவம் அப்பாவுடனும் அம்மாவுடனும் விளையாட்டிலும் மகிழ்ச்சியாக கழிந்தது. ஆனால் இப்போதைய குழந்தைகளை அறைக்குள்ளேயே அடைத்து வைக்கிறோம். வெளியே விடுவதில்லை.
இதனால் அவர்கள் மனநிலை மாறுகிறது. அந்த விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. குழந்தைகளும், பெற்றோரும் பார்க்கும் படமாக தயாராகி உள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் என பலரிடம் கலந்தாய்வு செய்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் நடிக்கும் படங்களில் எப்போதும் 250 பேர் சூட்டிங்கில் இருப்பார்கள். ஆனால் ‘பசங்க-2’ படப்பிடிப்பில் 15 பேர் தான் இருந்தார்கள். அவ்வளவு எளிமையாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வசனங்கள் நன்றாக வந்துள்ளன.
எனக்கும், இந்த படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்தது. ஒரு குழந்தையை எப்படி சிரிக்க வைக்க முடியும் என்ற காட்சிகளை என் மூலம் டைரக்டர் வைத்துள்ளார். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாடமாக இந்த படம் இருக்கும். பொதுவாக இளைஞர்களுக்கான படங்களே அதிகம் வருகின்றன. குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெண்களுக்கான படங்கள் குறைவாக வருகிறது.
வித்தியாசமான படங்கள் தமிழில் வர வேண்டும். ‘தங்கமீன்கள்’, ‘காக்கா முட்டை’ படங்கள் அதுபோல் வந்திருந்தன. குழந்தைகள் படம் பார்க்க ஆசைப்பட்டால், ‘கார்ட்டூன்’ படங்களுக்கு தான் அழைத்து போக வேண்டிய நிலைமை உள்ளது. அவர்களுக்கான ஒரு நல்ல படமாக ‘பசங்க-2’ இருக்கும். என் ரசிகர்கள் வழக்கமான என்னுடைய படம் என்ற எதிர்பார்ப்புடன் வர வேண்டாம். இது குழந்தைகள் படம். ஆனால் ரசிகர்களும் இந்த படம் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நடிகைகள் பிந்து மாதவி, வித்யா பிரதீப், டைரக்டர் பாண்டிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
பெற்றோர் குழந்தைகளுடன் சேர்ந்து அவசியம் பார்க்க வேண்டிய படம்